×

சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்பட தமிழகத்தில் 80 இடங்களில் ஐ.டி. சோதனை: அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரிகள், காசா கிராண்ட், அப்பாசாமி கட்டுமான நிறுவனங்களில் நடந்தது

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட், அப்பாசாமி குழுமங்களுக்கு சொந்தமான 80க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்க பணம், பினாமி ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரபல கட்டுமான நிறுவனங்களாக ‘காசா கிராண்ட்’ மற்றும் ‘அப்பாசாமி ரியல் எஸ்டேட்’ ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்கள் மூலம் தமிழ்நாடு, பெங்களூரு, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு காட்டிய வருமானத்திற்கும், தற்போதைய நிதியாண்டில் காட்டிய வருமானத்திற்கும் இடையே பல கோடி ரூபாய் வித்தியாசம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு கட்டுமான நிறுவனங்களும், பல்வேறு நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த நிதி ஆண்டை காட்டிலும் தற்போதைய நிதியாண்டில் பல நூறு கோடி மதிப்புக்கு காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி குழுமம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். மேலும், தமிழ்கம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் இந்த இரண்டு நிறுவனங்கள் தான் முதலிடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் குழுமத்திற்கு சொந்தமான, அலுவலகங்கள், ஓட்டல்கள் மற்றும் இந்த இரண்டு கட்டுமான நிறுவனத்திற்கு மார்பிள் கற்கள் வழங்கிய நிறுவனம் என பல இடங்களில் நேற்று காலை 20 கார்கள், 2 டெம்போ வேன் என 22 வாகனங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதேபோல், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், அவரது நணபர்கள் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான கரூர் மற்றும் கோவையில் உள்ள இடங்களிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அப்பாசாமி கட்டுமான நிறுவன அதிபர் அப்பாசாமி மற்றும் அவரது மகன் ரவி அப்பாசாமிக்கு சொந்தமான தி.நகர் ஜிஎன்செட்டி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல், கோட்டூர்புரம் ரிவர் வீவ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருபில் உள்ள அப்பாசாமியின் கட்டுமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் வீடு, எ.வ.வேலுவின் சகோதரர் வீடு, காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடு, அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடந்தது.

மேலும், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள கட்டுமான தொழில் செய்து வரும் கமலாக்கர் ரெட்டி என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள், தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் எடுத்து பணிகள் செய்து வரும் புரசைவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அமித் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான மகளிர் கலை கல்லூரியில், திமுக இளைஞரணி சார்பில் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அமைச்சர் எ.வ.வேலு சென்று இருந்தார். பின்னர் வழக்கமாக நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தனது கல்லூரி வளாகத்தில் எ.வ.வேலு நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது துணை ராணுவப்படையுடன் 4 கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எ.வ.வேலு, ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சோதனை நடத்தவும் அனுமதித்தார். அதை தொடர்ந்து அதிகாலை 5.30 மணி முதல் சோதனை நடந்தது. கல்லூரி வளாகத்திற்குள் அமைச்சரின் வீடு உள்ளது. அங்கும் சோதனை நடந்தது.

இதனிடையே ஒரே வளாகத்திற்குள் பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி ஆகியவை இருப்பதால் ஐடி கார்டு சரிபார்த்த பின்னரே மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை துணை ராணுவப்படையினர் அனுமதிக்கின்றனர். சோதனை நடைபெற்ற பகுதிக்குள் வெளியாட்கள் யாரையும் துணை ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. பத்திரிக்கையாளர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும், செல்போனில் படம் பிடித்த ஒரு செய்தியாளரிடம் இருந்து செல்போனை பறித்து, அதில் இருந்த காட்சிகளையும் வருமானவரித்துறை அதிகாரிகள் அழித்தனர். இந்நிலையில், சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் ஒரு குழுவினர் மட்டும் பகல் 2.15 மணியளவில் மூன்று வாகனங்களில் அங்கிருந்து புறப்பட்டு வெளியே சென்றனர். ஆனால், எங்கே செல்கின்றனர் என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மற்றொரு குழுவினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வெளியே சென்ற அதிகாரிகளும் மாலையில் மீண்டும் கல்லூரிக்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கரூரில்பெரியார் நகரில் உள்ள முன்னாள் எம்எல்ஏ வாசுகி முருகேசனின் தங்கை வீடு, கரூர் காந்திநகரில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனம், அவரது வீடு உள்ள கேவிபி நகர், கரூர் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள சக்திவேல் வீடு ஆகிய 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையை பொறுத்தவரை, ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் அப்பார்ட்மெண்டில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீட்டில் நேற்று அதிகாலை முதல் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதேபோல், அதே பகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின், மகன் ஸ்ரீராம் வீடு, சிங்காநல்லூரில் திமுக பிரமுகர் எஸ்.எம். சாமி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. மீனா ஜெயக்குமாரின் கணவரும், நடத்தி வரும் எஸ்எம் சாமியும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. மேலும் கோவை சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகம் மற்றும் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் பங்குதாரராக உள்ள பீளமேடு செப்பீல்டு டவரில் உள்ள நிறுவனம் ஆகிய மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது.

அதேபோல், விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியைச் சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் பிரேம் என்பவருக்குச் சொந்தமான வீடு, விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சொகுசு விடுதி, கிரானைட் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். அப்போது, கடந்த ஓராண்டுகளில் எந்தெந்த நிறுவனங்களுக்கு கிரானைட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் விவரங்கள் குறித்தும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர். அதன்படி பிரபல கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் ‘அப்பாசாமி ரியல் எஸ்டேட் குழுமத்திற்கு சொந்தமான மற்றும் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் எடுத்து பணிகள் செய்து வரும் தொழிலதிபர்கள் வீடு, அலுவலகங்கள் என 40 இடங்கள் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான திருவண்ணாமலை, கரூர், கோவை 40 இடங்கள் என மொத்தம் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கட்டுமான நிறுவனங்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள ரொக்க பணம், பங்கு முதலீட்டு ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை இன்றும் இரவு வரை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை முடிவுந்த பிறகு தான் எத்த நூறு கோடி ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிஏய்ப்பு செய்துள்ளனர் என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் அமைச்சருக்கு சொந்தமான இடங்கள், கட்டுமான அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 2021ம் ஆண்டு வருமான வரித்துறை அதாவது தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தியது. தற்போது 2வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

The post சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் உள்பட தமிழகத்தில் 80 இடங்களில் ஐ.டி. சோதனை: அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரிகள், காசா கிராண்ட், அப்பாசாமி கட்டுமான நிறுவனங்களில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tiruvannamalai ,Govai ,Karur ,Minister ,Velu House ,Colleges ,Casa Grand ,Apasamy Construction Companies ,Abbasami ,Velu ,Goa ,Velu House, Colleges ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...