×

எங்களது அடுத்த இலக்கு இறுதி போட்டி தான்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் இந்தியா-இலங்கை மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன் குவித்தது. பின்னர் களம் இறங்கிய இலங்கை 19.4ஓவரில் 55 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 302 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 விக்கெட் அள்ளிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 7வது போட்டியில் வென்ற இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: “உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சென்னையில் தொடங்கியது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது முதல் இலக்காக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஏழு போட்டிகளையும் நாங்கள் அணுகிய விதம் அபாரமாக இருந்தது.

இந்த வெற்றியில் அனைவரது பங்கும் அடங்கியுள்ளது. ஒவ்வொருவரும் அவர்களது பொறுப்பை உணர்ந்து விளையாடி உள்ளனர். எங்களது அடுத்த இலக்கு இறுதிப் போட்டிதான். இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து விட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு மைதானத்திலுமே 350 ரன் அடித்தால் அது வெற்றிக்கான ரன்களாக இருக்கும். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் மிகவும் தெளிவாக விளையாடினார். அவரை நான் நீண்ட நாட்களாகவே பார்த்து வருகிறேன் அவர் இது போன்ற பெரிய இன்னிங்சை விளையாடக்கூடியவர் தான். அதே போன்று பந்துவீச்சில் சிராஜ் ஒரு குவாலிட்டியான பவுலர்.

அவரிடம் புது பந்தை தந்து இதே போன்று சிறப்பாக வீசினால் எங்களது அணி வேறு விதமாக தெரியும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். வேக பந்துவீச்சாளர்கள் கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது எல்லாம் நல்ல விஷயமாக பார்க்கின்றேன். டிஆர்எஸ் முடிவை எடுப்பது குறித்து ராகுல் மற்றும் பவுலர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டேன். அவர்கள் தான் எனக்காக முடிவெடுக்க வேண்டும். சில சமயம் சரியாக இருக்கும், சில சமயம் தவறாக கூட போகலாம். அடுத்தது தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறோம். அவர்களும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். இது நிச்சயம் நல்ல ஆட்டமாக அமையும்,’’ என்றார்.

The post எங்களது அடுத்த இலக்கு இறுதி போட்டி தான்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Mumbai ,India ,Sri Lanka ,Cricket World Cup ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...