×

ஓர் ஆண்டில் 97,000 பேர் கைது… அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு!!

வாஷிங்டன் : கடந்த ஓர் ஆண்டில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 97,000 இந்தியர்களில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவிற்குள் பல்வேறு எல்லைகள் வழியாக சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தகவலின்படி 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 96,917 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30,010 பேர் கனடா வழியே, 41,770 பேர் மெக்சிகோ வழியாகவும் எல்லை தாண்டி நுழைய முயன்று அமெரிக்க அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ளோர், அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த பிறகு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 கால கட்டத்தில் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற 19,883 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2023ல் அந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றவர்களில் குஜராத், பஞ்சாப் மாநிலத்தவர்களே அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் எல்லை தாண்டி பிடிபடுபவர்கள் வெறும் சிறிய விகிதம் தான் என்றும் ஒருவர் பிடிபடும் போது, குறைந்தது 10 பேர் வெற்றிகரமாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவதாக குஜராத் போலீஸ் உயரதிகாரி கூறுகிறார்.

The post ஓர் ஆண்டில் 97,000 பேர் கைது… அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Indians ,United States ,Washington ,US ,Gujarat ,Punjab ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...