×

இந்தியாவில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையை 50% உயர்த்த வேண்டும்: விஐடி வேந்தர் விசுவநாதன் தகவல்

சென்னை: இந்தியாவில் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என விஐடி வேந்தர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். விஐடி சென்னையில் “சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு விஐடி வேந்தரும் நிறுவனருமான கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணை தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். இதில் சீஷெல்ஸ் குடியரசின் கெளரவ தூதர் எம். சேஷா சாய், செனகலின் கெளரவ தூதர் அசோக்.ஆர்.தக்கர், தான்சானியாவின் கெளரவ தூதர் கிருஷ்ணா என். பிம்பிள்.

ஜாம்பியாவின் கெளரவ தூதர் சுகுமார் நடராஜன், மியான்மரின் கெளரவ தூதர் பேராசிரியர் ஜே.ரங்கநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விசுவநாதன் பேசுகையில், ‘‘வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக வளரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை ஈர்க்க விஐடி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பிற நாடுகளை விட நேபாளத்தில் இருந்து அதிக மாணவர்கள் விஐடிக்கு படிக்க வருகின்றனர். பிற நாடுகளை சேர்ந்த மாணவர்களை ஈர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு நாடு கல்வியில் பின்தங்கினால் பொருளாதாரத்திலும் பின்தங்கிவிடும்.

இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதம் கல்விக்காக செலவிடப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் படி 5 முதல் 6 சதவீதமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். இந்தியாவின் உயர்கல்விக்கான சராசரி மொத்த சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உள்ளது. அதில், அதிக மாணவர் சேர்க்கை விகிதத்தைக் கொண்ட முதல் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நாட்டின் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையை 50% உயர்த்த வேண்டும்: விஐடி வேந்தர் விசுவநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,VIT ,Chancellor ,Viswanathan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து...