×

தீபாவளி காலத்தில் பலகாரம் தயாரிக்க லைசென்ஸ் முக்கியம்: பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை:தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையில் பட்டாசுகளுக்கு அடுத்து மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது பலகாரங்கள், இனிப்பு வகைகள்தான். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் முறையாக உரிமம் பெற்று தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகளை தயார் செய்ய வேண்டும்.

உரிமம் இல்லாமல் இனிப்பு, பலகாரங்களை தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களின் மேல் உணவு தயாரிப்பாளரின் முழு முகவரி இருக்க வேண்டும். அதேபோல பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி நிச்சயம் இருக்க வேண்டும். சைவம் மற்றும் அசைவ குறியீடும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி இனிப்பு தயாரிக்கும் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்.

முன்னதாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். தரமற்ற உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அது அழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு, கார வகைகள், கேக் போன்ற பேக்கரி உணவுகளை தயாரிக்கும் போது விற்பனையாளர்கள் முறையாக உரிமம் இல்லாமல் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்வீட்ஸ் விநியோகிக்கும் தீபாவளி சீட் நடத்துபவர்களும் முறையாக உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தீபாவளி காலத்தில் பலகாரம் தயாரிக்க லைசென்ஸ் முக்கியம்: பாதுகாப்பு துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Balakaram ,Diwali ,Security Department ,Chennai ,Diwali festival ,Balakaras ,Security ,Dinakaran ,
× RELATED தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில்...