×

தொடர்ச்சியாக 7வது வெற்றி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: 302 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அமர்க்களம், விக்கெட் வேட்டையாடினார் ஷமி

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில், இலங்கையை 302 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் கண்டனர். மதுஷங்கா வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ரோகித். அதனால் ஆர்பரித்த அரங்கம் அமைதியாகும் முன்ேப 2வது பந்தில் போல்டானார் ரோகித். எனவே அரங்கம் அமைதியானது.

அடுத்த வந்த கோஹ்லி முதல் ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து கணக்கை தொடங்கினார். கூடவே 2, 4வது ஓவர்கள் மெய்டன் ஓவராகிப் போனது. கில் 5வது ஓவரில், தான் சந்தித்த 9வது பந்தில் முதல் ரன்னை பவுண்டரி மூலம் எடுத்தார். அதன் பிறகு கோஹ்லியும், கில்லும் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 189ரன் சேர்த்தனர். சதத்தை நெருங்கிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கில் 92, கோஹ்லி 88ரன்னில் வெளியேறினர். அதன்மூலம் 50வதுசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததுடன், டென்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் நல்ல வாய்ப்பையும் கோஹ்லி இழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாசும், ராகுலும் 4வது விக்கெட்டுக்கு 60ரன் சேர்த்தனர். ராகுல் 21, சூரியகுமார் 12, ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

இடையில் சதத்தை நெருங்கிய ஸ்ரேயாஸ் 82ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஷமி 2, ஜடேஜா 35 ரன்னில் ரன் அவுட் ஆயினர். பும்ரா 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் மதுஷங்கா மட்டும் 5 விக்கெட்களை அள்ளினர். கூடவே சமீரா ஒரு விக்கெட் எடுத்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பு 357ரன் குவித்தது. அதனையடுத்து 358 ரன் எடுத்தால் பெற்றி பெற முடியும் என்று சற்றே பெரிய இலக்கை இலங்கை விரட்ட ஆரம்பித்தது. பும்ரா, சிராஜ், ஷமி வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இலங்கை முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுக்க, அந்த அணி 13.1 ஓவரில் 29 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து பரிதவித்தது (5 டக் அவுட், இரண்டு பேர் 1 ரன், மேத்யூஸ் 12 ரன்).

தீக்‌ஷனா – ரஜிதா ஜோடி 9வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 20 ரன் பார்ட்னர்ஷிப்! அமைத்தது. ரஜிதா 14, மதுஷங்கா 5 ரன்னில் வெளியேற, இலங்கை 19.4 ஓவரில் 55 ரன்னுக்கு சுருண்டு 302 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது. தீக்‌ஷனா 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷமி 5 ஓவரில் 1 மெய்டன் உள்பட 18 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிராஜ் 3, பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ச்சியாக 7வது வெற்றியை வசப்படுத்திய இந்தியா 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியதுடன், முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்று அசத்தியது.

* இந்தியாவுக்காக குறைந்த ஆட்டங்களில் 2000 ரன்னை வேகமாக தொட்ட வீரர்களின் பட்டியலில் சுப்மன் கில்(38ஆட்டங்கள்) முதல் இடத்தை எட்டியுள்ளார். அடுத்த இடங்களில் ஷிகர் தவான்(48), ஷிரேயாஸ் அய்யர்(49), நவஜோத் சித்து(52), சவுரவ் கங்குலி(52) ஆகியோர் உள்ளனர்.

* ஒருநாள் ஆட்டங்களில் 5 விக்கெட் எடுக்க அதிக ரன் கொடுத்தவர்கள் பட்டியலில் மதுஷங்கா(85ரன்) நேற்று முதலிடத்தை பிடித்தார். இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத்(80ரன், 2019) 2வது இடத்தில் இருக்கிறார்.

* ஒரு வீரர் கூட சதம் விளாசாமல் ஒரு அணி அதிக பட்ச ஸ்கோரை எட்டிய நாடுகளில் பட்டியலில் நேற்று இந்தியா(357/8) முதல் இடத்தை பிடித்துள்ளது.

* உலக கோப்பை ஆட்டங்களில் தலா 9 சிக்சர் விளாசிய சம்பவத்தை இந்தியா நேற்று 4வது முறையாக நிகழ்த்தியது.

* முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழப்பதும் இந்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு 2வது முறையாகும். இதற்கு முன் சென்னையில் நடந்த ஆட்டத்தில் இஷான் கிஷணின் விக்கெட்டை ஆஸி வீரர் மிட்செல் ஸ்டார்க் தூக்கினார்.

* இவர்களை தவிர டி காக்(தெ.ஆப்ரிக்கா) விக்கெட்டை வீரர் ரீஸ் டாப்லே(இங்கிலாந்து), லிட்டன் தாஸ்(வங்கம்) விக்கெட்டை போல்ட்(நியூசிலாந்து) ஆகியோர் முதல் ஓவரிலேயே சாய்த்தனர்.

* பும்ராவும் நேற்று முதல் ஓவரில் முதல் பந்தில் நிசாவ்காவின் விக்கெட்டை கைப்பற்றினார்.

* தீக்‌ஷனா வீசிய 11வது ஓவரில் 1 ரன் எடுத்த கோஹ்லியின் ஸ்கோர் 34 ஆனது. அதன் மூலம் ஒரு ஆண்டில் 1000 ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

* கோஹ்லி இதுவரை 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2023 என 8 முறை ஒரே ஆண்டில் 1000ரன் குவித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 7முறை 1000ரன் குவித்த டென்டுல்கர் இருக்கிறார்.

* உலக கோப்பைகளில் அதிக அரைசதம் விளாசிய இந்தியர்கள் பட்டியலிலும் கோஹ்லி நேற்று 2வது இடம் பிடித்தார். அவர் 33 ஆட்டங்களில் 13 அரைசதம் விளாசியுள்ளார். முதல் இடத்தில் உள்ள டெண்டுல்கர் 44 ஆட்டங்கள் மூலம் 21 அரைசதம் அடித்துள்ளார்.

The post தொடர்ச்சியாக 7வது வெற்றி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: 302 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அமர்க்களம், விக்கெட் வேட்டையாடினார் ஷமி appeared first on Dinakaran.

Tags : India ,Shami ,Sri Lanka ,Amarkalam ,Mumbai ,ICC World Cup ODI ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...