×

மேட்டுப்பாளையம் நகராட்சியை முற்றுகையிட முயற்சி 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 கவுன்சிலர்களும் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியை முற்றுகையிட முயன்ற அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கடந்த 31ம் தேதி நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது அதிமுக கவுன்சிலர்கள் குப்பை அள்ளுவது தொடர்பாக நகர்மன்ற தலைவர் பதிலளிக்க கூறினர். நகராட்சி கமிஷனர், பொறியாளர் உள்ளிட்டோர் இல்லாததால் கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக கவுன்சிலர்கள் முக்கிய அதிகாரிகள் இல்லை என்றாலும் மற்ற அதிகாரிகள் உள்ளனர். எனவே, கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. நாற்காலி, மைக் தூக்கி வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முயன்றார். பேச்சுவார்த்தை பலனளிக்காததால் ஒரு கட்டத்தில் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் 11 தீர்மானங்களும் ‘ஆல் பாஸ்’ என நிறைவேற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், திமுக கவுன்சிலர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், ‘நகர்மன்ற தலைவரை தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் பேசி தாக்க முற்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதேபோல் அதிமுக சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 3வது நாளாக நீடித்தது.

நகராட்சி நிர்வாகம் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை. நேற்று முன்தினம் அதிமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களுக்கு ஆதரவு தெரிவித்து நகர்மன்றத்தை முற்றுகையிட உள்ளதாக அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதலே நகராட்சி அலுவலகத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து ஏடிஎஸ்பி சுரேஷ் தலைமையில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி, பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். முக்கிய பணி காரணமாக வந்த மக்கள் மட்டுமே நகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார் (கவுண்டம்பாளையம் தொகுதி), ஏகே செல்வராஜ் (மேட்டுப்பாளையம் தொகுதி) தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுன்சிலர்களுக்கு ஆதரவாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை 500 மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததை தொடர்ந்து போலீசார் எம்எல்ஏக்கள் பிஆர்ஜி அருண்குமார், ஏகே செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அதிமுக கவுன்சிலர்கள் 8 பேரும் கைதானார்கள். எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் மொத்தம் 105 பேரை கைது செய்து தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு நிலவியது.

The post மேட்டுப்பாளையம் நகராட்சியை முற்றுகையிட முயற்சி 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது: உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 8 கவுன்சிலர்களும் கைது appeared first on Dinakaran.

Tags : 2 ,AIADMK MLAs ,Mettupalayam ,Coimbatore ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...