×

18% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது பதிவு தபால்களுக்கு ரூ.10 கட்டண உயர்வு: ஒவ்வொரு 20 கிராம் பார்சலுக்கும் 40 காசுகள் கூடுதல் வசூல்

நாகர்கோவில்: 18 சதவீதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் பதிவு தபால்கள் உட்பட அனைத்து தபால் சேவைகளுக்கும் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அனைத்து தபால் சேவைகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டியை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் பதிவு தபால்கள் கட்டணம் நவம்பர் 1ம் தேதி முதல் உயர்ந்துள்ளது. பதிவு தபால்கள் கட்டணம் 20 கிராம் வரை ரூ.22 என்று இருந்தது ரூ.4 உயர்ந்து ரூ.26 ஆகியுள்ளது. இதில் ரூ.4 ஜிஎஸ்டி ஆகும். 18 சதவீதம் ஜிஎஸ்டி என்றாலும் அது ரூ.3.60 என்றாலும் ரவுண்டாக மாற்றி ரூ.4 ஆக சேர்த்து வசூலிக்கின்றனர்.

இதனால் வேறு வழியின்றி 40 காசுகள் கூடுதலாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட பார்சல் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. பதிவு பார்சல் அனுப்ப 500 கிராம் வரை முன்பு கட்டணம் ரூ.36 ஆக இருந்தது. தற்போது இது ரூ.43 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கான கட்டணம் ரூ.52ல் இருந்து ரூ.62 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பீடு போஸ்ட்களுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. குறைந்த கட்டணமான ரூ.35க்கு ரூ.6 ஜிஎஸ்டி வழங்க வேண்டியுள்ளது.

அந்த வகையில் ஸ்பீட் போஸ்ட்க்கு இனி ரூ.41 செலுத்த வேண்டும். 51 கிராம் முதல் 200 கிராம் வரை தூரம் அடிப்படையில் கட்டணங்கள் உயர்வு செய்யப்படுகிறது. அச்சடிக்கப்பட்ட நாளிதழ்கள், மாத இதழ்கள் போன்றவை அனுப்புவதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தபால் ஸ்டாம்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு உள்ளது. ஆதார் கார்டுகள், பாஸ்போர்ட் போன்றவை அனுப்பிடவும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டி வரும்.

மேலும் கங்கா நீர் பெறுவதற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதால் தபால் சேவை கட்டணங்கள் நேற்று முதல் (நவம்பர் 2) கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் இதுதொடர்பான அறிவிப்புகள் ஏதும் பணியாளர்களுக்கு முன்னதாக வரவில்லை என்று கூறப்படுகிறது.

The post 18% ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது பதிவு தபால்களுக்கு ரூ.10 கட்டண உயர்வு: ஒவ்வொரு 20 கிராம் பார்சலுக்கும் 40 காசுகள் கூடுதல் வசூல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...