×

மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப கொடி கம்பம் நாடகம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க பாஜ செயல்படுகிறது: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு

விருதுநகர்: நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ள நிலையில் பாஜவுக்கு மட்டும் கொடிக்கம்பம் நடுவது பிரச்னையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க பாஜ செயல்படுகிறது என்று மாணிக்கம்தாகூர் எம்பி குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் விருதுநகர் இஎஸ்ஐ மருத்துவமனை, ரோசல்பட்டி ஊராட்சியில் நடைபெறும் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ள நிலையில், பாஜவினருக்கு மட்டும் கொடிக்கம்பம் நடுவது பிரச்சனையாக உள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.2,500 கோடி இன்னும் வரவில்லை. அதனால், வேலை செய்த 90 லட்சம் பெண்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. ஆனால் பாஜவினர் மட்டும் வாடகைக்கு இருக்கும் வீட்டின் முன் கொடிக்கம்பம் நட அனுமதிக்கவில்லை என்பதற்காக, ஊரெல்லாம் கொடிக்கம்பம் நட துடிக்கிறார்கள். தமிழக மக்களுக்கு எதிரான சிந்தனையுடன் பாஜவினர் செயல்படுகிறார்கள். தமிழக மக்கள் பாஜ, அண்ணாமலையின் நாடகத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் பாஜ தனித்து விடப்பட்டுள்ளது.

மக்களை பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் போடும் நாடகம். தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை குலைக்கும் நடவடிக்கையில் பாஜவினர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். அதானிக்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ, அவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுகிறது. ராகுல்காந்தி கூறியது போல மோடியும், அமித்ஷாவும் பணியாற்றுவது அதானிக்காகத்தான். இந்த அரசு அதானியின் அரசாக மாறியிருக்கிறது. இவ்வாறு பேசினார்.

The post மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப கொடி கம்பம் நாடகம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க பாஜ செயல்படுகிறது: மாணிக்கம்தாகூர் எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Tamil Nadu ,Manikamthakur ,Virudhunagar ,Kampam ,
× RELATED தமிழ்நாடு ஜனநாயகத்தை...