×

கஞ்சா கடத்தலை தடுக்க ரோந்து சென்ற போலீசின் படகு பழுது 4 மணி நேரம் நடுக்கடலில் தத்தளிப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சோதனை செய்ய முத்துப்பேட்டை லகூன் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம், வனத்துறை மற்றும் மீன்வளத்துறையினர் இணைந்து வனத்துறைக்கு சொந்தமான படகில் நேற்று மாலை 6 மணியளவில் கடலுக்கு சென்றனர்.

இதில் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ரகுபதி, தலைமைக் காவலர் கலைவாணன், பெண் காவலர் சூர்யா, வனக் காப்பாளர்கள் கணேசன், இளையராஜா மற்றும் மீன்வளத்துறை சார்பில் சாகமித்ரா ஆலன் வில்பிரெட், ஜான் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மீனவர்களின் படகுகளில் ஏறி கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தல் நடைபெறுகிறதா என்றும் சோதனை நடத்தினர். மேலும் மீனவர்களிடம் சந்தேக நபர்கள் நடமாட்டம் மற்றும் குற்றசம்பவங்கள், கடத்தல் உள்ளிட்டவைகள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினர்.

இரவு 8 மணியளவில் லகூன் கடல் முகத்துவாரம் மணக்கட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, போலீசார் சென்ற படகு திடீரென பழுதாகி நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் முத்துப்பேட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஜாம்புவானோடை படகு துறையிலிருந்து வேறு ஒரு படகு கொண்டு வரப்பட்டது. பின்னர் 12 மணியளவில் அந்த படகில் ஏறி சோதனையை தொடர்ந்தனர்.

The post கஞ்சா கடத்தலை தடுக்க ரோந்து சென்ற போலீசின் படகு பழுது 4 மணி நேரம் நடுக்கடலில் தத்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Mediterranean ,Muthuppettai ,Thiruvarur district ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்