×

கல்லறை திருநாள் அனுசரிப்பு: முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் வழிபாடு

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களிலுள்ள கல்லறைகளில் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. முன்னோர்களின் கல்லைறகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர்.  கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட தங்களின் முன்னோர்களை நினைவுகூறும் விதமாக கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கின்றனர். இதற்காக முதல் நாளே கல்லறைகளை சுத்தப்படுத்தினர். படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர். இன்று காலை கல்லறைகளுக்கு வந்து மெழுகுவர்த்தி ஏற்றியும், ஊதுவத்திகளை கொளுத்தி வைத்தும் முன்னோர்களை நினைத்து கண்ணீர் மல்க வழிபாடு செய்தனர்.

மேலும் மரித்த தங்களது உறவினர்களுக்கு பிடித்த தின் பண்டங்களை வைத்தும் உருக்கமாக வழிபட்டனர். அந்தந்த பகுதி கிறிஸ்தவ தேவாலய பங்கு தந்தையர்கள் கல்லறைக்கு வந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மதுரையில் கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்திற்குட்பட்ட கல்லறையில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, கல்லறையை மந்திரித்து வைத்தார். மேலும், மதுரையில் கத்தோலிக்க திருச்சபைகளுக்கு உட்பட்ட மஹபூப்பாளையம் கல்லறை, துவரிமான் கல்லறை, தத்தனேரி கல்லறையிலும் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு கல்லறைகள் மந்திரிக்கப்பட்டன. ஞானஒளிபுரம் புனித வளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப் திருப்பலி நிறைவேற்றி கல்லறையை மந்திரித்து வைத்தார். இதேபோல் திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி என மாவட்டம் முழுவதும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் லாஸ்காட் சாலையில் அமைந்துள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நடந்தது. திருஇருதய ஆலய வட்டார அதிபர் சிலுவை மைக்கேல் ராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கம்பம்

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ் தலைமையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் மற்றும் கம்பம் பங்கை சேர்ந்த குழந்தையேசு அன்பியம், புனித அன்னை தெரசா அன்பியம், புனித ஆரோக்கிய அன்னை அன்பியம், புனித செபஸ்தியார் அன்பிய மக்கள் கலந்து கொண்டனர். இதுபோன்று மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநதாபுரம், சிவகங்கை, தேனி மாவட்டத்திலுள்ள கல்லறைகளிலும் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

The post கல்லறை திருநாள் அனுசரிப்பு: முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Christians ,Madurai ,Grave Thirunal ,Theni ,Dindigul ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...