×

சூர்யா சிவா பாஜக கட்சி பதவியில் மீண்டும் தொடரலாம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை: சூர்யா சிவா ஏற்கனவே தான் வகித்து வந்த பாஜக கட்சிப் பதவியில் மீண்டும் தொடரலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் திமுகவையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தனது தந்தை திருச்சி சிவாவையும் கடுமையாக விமர்சித்து வந்தார். பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவருடன் பேசிய செல்போன் உரையாடல் சூர்யா சிவாவை உலகளவில் பேமஸாக்கியது.

இதையடுத்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், சூர்யா சிவா ஏற்கனவே தான் வகித்து வந்த பாஜக கட்சிப் பதவியில் மீண்டும் தொடரலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சூர்யா சிவா அவர்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரு. சூர்யாசிவா அவர்கள், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா சிவா அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாக இருந்த நிலையில், பாஜகவில் மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சூர்யா சிவா பாஜக கட்சி பதவியில் மீண்டும் தொடரலாம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : SURYA SHIVA ,BJP ,ANNAMALAI ,Chennai ,Tamil ,Nadu ,Surya Siva ,
× RELATED போலீஸ் பாதுகாப்பு கோரி சூர்யா சிவா...