×

திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவிண்ணகரம் என்பது ஒரு காலத்தில் துளசி வனமாக, துளசி செடிகள் செழித்து வளர்ந்த ஒரு இடமாக இருந்தபோது, அங்கே மார்க்கண்டேய மகரிஷி இருந்தார். துளசியை மாலையாக தொடுத்து போடுவதையும், துளசி மாலையை அணிந்தவன் மீது பக்தி செலுத்துவதை மட்டுமே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார் அவர். அந்த நாராயணனே தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் என்ற ஒரு ஆசை மார்க்கண்டேய மஹரிஷிக்கு இருந்தது. இந்த ஆசை, வைகுண்டத்தில் இருந்த பூமிதேவியின் காதில் விழுந்துவிட்டது. என் பர்த்தாவின் பக்தரான இந்த மார்க்கண்டேயருக்கு தாமே மகளாக பிறக்க வேண்டும் என்று ஆசை கொண்டு, துளசி வனத்தில், ஒரு துளசி செடியின் கீழ் அவதரித்தாள் பூமிதேவி.

பெரியாழ்வார் எப்படி ஆண்டாளை ஒரு துளசி செடியின் கீழ் கண்டெடுத்து சந்தோஷப்பட்டாரோ, அப்படியே மார்க்கண்டேய மஹரிஷியும் பூமிதேவியை பார்த்து சந்தோஷப்பட்டார். அழகே உருவான அந்த பூமிதேவி அழகுக்கு இலக்கணமாய் மார்க்கண்டேயரின் பாச மழையில் நனைந்து திருமண வயதை எட்டிவிட்ட தருணமும் வந்தது.விண்ணோர் தலைவனாக இருக்கும் நாம், மண்ணோர் தலைவனாகவும் ஆகவேண்டும் என்ற ஆசை கொண்டு, கருணை உள்ளம் கொண்டு, நாராயணன், ஒரு பங்குணி மாத ஏகாதசி திதியும், திருவோண நட்சத்திரமும் இணைந்த ஒரு இனிய நாளில் தம் தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் மார்க்கண்டேய மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு ஒரு முதியவர் போன்ற தோற்றம் ஏற்படுத்தி கொண்டு வந்தார்.

வந்தவர் சாட்சாத் திருமால்தான் என்பதை உணராத மார்க்கண்டேய மஹரிஷி, “ஸ்வாமி, நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் பெயர் என்ன?’’ என்று பவ்யமாய் கேட்க, அதற்கு முதியவர் ரூபத்தில் வந்த பெருமானோ, “நானொரு புராண புருஷன். என் பெயரும் புராண புருஷன் தான்” என்றார். “அப்படியா சரி. தாங்கள் வந்த நோக்கம்?” என மார்க்கண்டேயர் கேட்க, அதற்கு வந்தவரோ, “உங்கள் மகளின் திருமண விஷயமாக பேச வந்திருக்கிறேன்” என்றார்.

“நல்லது. நீங்கள் உங்கள் மகனுக்கு என் மகளை கேட்டு வந்திருக்கிறீர்களா அல்லது உங்கள் பேரனுக்கா?” என்று மார்க்கண்டேய மஹரிஷி கேட்க, “ எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. உங்கள் மகளை திருமணம் செய்து கொண்டுதான் இனி மகன், பேரன் எல்லாம் எனக்கு வரவேண்டும். உங்கள் மகளை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, அவளை பெண் கேட்டுதான் நான் வந்திருக்கிறேன்” என்றாராம் பகவான். மார்க்கண்டேய மஹரிஷிக்கோ.. மிகவும் கோபம் வந்தது.

‘‘அடடா பெரியவரே. என் மகள் ரொம்ப சிறிய வயதானவள். அவள் எப்படி மிகவும் வயதான, புராண புருஷரான உங்களுக்கு மனைவியாக முடியும்? அவள் உங்களை எப்படி விரும்புவாள்? இது சாத்தியமேபடாது. நீங்கள் கிளம்புங்கள்” என்று மார்க்கண்டேயர்கூறிவிட, வந்த பெருமாளோ, “கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் பெண்ணை கூப்பிடுங்கள். அவள் என்னை பார்க்கட்டும். அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால், இதோ மறு நிமிடமே இங்கிருந்து கிளம்பிவிடுகிறேன்” என்று பிடிவாதமாக அந்த முதியவர் வடிவில் வந்த முகுந்தன் சொல்ல, எப்படியும் தன் மகளுக்கு இவரை பிடிக்காது என்ற தைரியத்தில், உடனே தம் மகளை அழைத்தார் மார்க்கண்டேயர்.

“மகளே, இதோ இங்கே வா. இங்கே வந்து பிதாமகனை (தாத்தா) பார்” என்று அழைத்தார். பூமிதேவி நேராக ஒப்பிலியப்பனான அந்த முதியவரை பார்த்தாள், “அப்பா இவர் பிதாமகன் இல்லை. பிதாமகனுக்கு (பிரம்மா) பிதா (தந்தை) ஆயிற்றே” என்றாளாம் அவள். பிரம்மாவை படைத்தவரே அந்த விஷ்ணு பகவான் தானே? அந்த அர்த்தத்தில் பூமிதேவி அப்படி சொல்ல, மார்க்கண்டேயரோ, நாமோ.. இவரை தாத்தா என்றுதான் சொல்லி அறிமுகபடுத்தினோம். ஆனால், நம் பெண்ணோ, இவரை கொள்ளுதாத்தா என்றல்லவா சொல்கிறாள் என நினைத்து கொண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

“மகளே, இவர் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறார். இந்த வயதானவரை நீ எப்படியம்மா திருமணம் செய்து கொள்ள முடியும்?’’ என மார்க்கண்டேயர் தன் மகளிடம் கேட்க, அவளோ, “எனக்கு இவரை மிகவும் பிடித்திருக்கிறது. என்னை இவருக்கே திருமணம் செய்து வைத்துவிடுங்கள்” என பூமாதேவி சொல்ல, அதிர்ச்சி அடைந்த மார்க்கண்டேயர், அந்த முதியவரிடமே, ‘‘பெரியவரே, வயதில் மூத்தவரே என் மகளுக்கு எதுவுமே தெரியாது. பழைய சாதத்தில் உப்பு போடகூட என் மகளுக்கு தெரியாது. அதனால் இங்கிருந்து கிளம்பிவிடுங்கள், முதியவரே” என்றுகூற, பூமிதேவியோ, “அப்பா அவரை ஏன் முதியவர் என்று அழைக்கிறீர்கள்? அவர் இளைஞனாக அல்லவா இருக்கிறார் என்று கேட்க..

அதற்கு மார்க்கண்டேயரோ, “சற்று நேரம் முன்பு நீ தானே அவரை கொள்ளுதாத்தா பிதாமகருக்கும் பிதா என்று சொன்னாய்?” என்று வியப்புடன் கேட்க, ஆமாம் பிரம்மாவிற்கே தந்தையான நாராயணன் போல இவர் இருக்கிறார் என்ற அர்த்தத்தில் நான் அவ்வாறு சொன்னேன்” என்று பூமிதேவிகூற, கோபம் கொண்ட மார்க்கண்டேயர், வந்திருந்த முதியவரை நோக்கி திரும்ப, அங்கே அழகே உருவாக, இளமை ததும்ப அமர்ந்திருந்த ஒப்பிலி யப்பனை கண்டு விக்கித்து நின்றார்.

தான் விருப்பப்பட்ட படியே விஷ்ணுவே மாப்பிள்ளையாக வரப்போகிறார் என்ற சந்தோஷத்தோடு கை கூப்பினார் மார்க்கண்டேயர். வைகுண்டத்திலிருந்து இந்த திருமண வைபவத்தை காண அனைவருமே அங்கே குழுமிவிட்டனர். தேவர்கள் எல்லாரும் பூமிதேவி – ஒப்பிலியப்பன் திருமணத்தை விமர்சையாக நடத்த வேண்டும் என்று ஒன்றுகூடி, ஐப்பசி திருவோண நாளை திருமணம் நடத்துவதற்கான நாளாக குறித்தனர். பங்குனி திருவோணம் முதல் ஐப்பசி திருவோணம் வரை வைகுண்டத்திலிருந்து அனைவருமே அங்கே வந்து தங்கியதால், விண்ணகரம், திருவிண்ணகரம் என்றே பெயர் பெற்று விளங்கலாயிற்று இந்த ஒப்பில்லா ஒப்பிலியப்பன் ஸ்தலம்.

அது மட்டுமா? தன் மகளுக்கு உப்பு போட்டுகூட சமைக்க தெரியாது என்று சொன்னாரே மார்க்கண்டேய மஹரிஷி, அவர் வாக்கிற்கு மதிப்பு கொடுத்து இன்று வரை உப்பில்லா பண்டங்களையே தனக்கு நெய்வேதியமாக ஏற்று கொண்டு நமக்கெல்லாம் அருள் பாலித்து கொண்டிருக்கிறார் ஒப்பிலியப்பன்.

தொகுப்பு: நளினி சம்பத்குமார்

The post திருவிண்ணகரப்பனின் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்