×
Saravana Stores

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21 அன்று தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 1 வரை 101.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 43 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நவம்பர் 1 முடிய, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 32 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 5 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.

இன்று (02.11.2023) காலை 8.30 மணி முடிய 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 37.03 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.06 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் கடந்த செப்டம்பர் 19ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

தலைமைச் செயலாளர் கடந்த செப்டம்பர் 14 அன்று அனைத்து துறை அலுவலர்கள், முப்படை மற்றும் ஒன்றிய அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்கு பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன், பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும்.

நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடுமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு செப்டம்பர் 25 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி எரிபொருள் கிடைக்கவும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், எண்ணெய் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் கடந்த அக்டோபர் 5 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார். அக்டோபர் 25 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.

அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023- 24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி. நகராட்சி நிருவாகம் மற்றும் நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு செய்யப்பட்டுள்ளது. 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில் வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநில / மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன. பொதுமக்கள், Whatsapp எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம். 424 கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் சைரன் ஒலி, நேரடி ஒளிபரப்பு மூலம் எச்சரிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்திகள் பரப்பப்படுகின்றன. பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு புயல், வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை மற்றும் காற்றின் வேகம் குறித்து நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. TNSMART செயலி மூலமாகவும், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு உரிய காலத்தில் வானிலை முன்னறிவிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மின்னல் எச்சரிக்கை வழங்கப்படுகிறது. 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 65,000 முதல் நிலை மீட்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதோடு, 16 மாவட்டங்களில் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் 5500 தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

அனைத்து மாவட்டங்களிலும், தேடல், மீட்பு உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் 113 இலட்சம் நபர்கள் தங்கும் வகையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என மொத்தம் 4967 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி பொறுத்தமட்டில் 169 நிவாரண முகாம்கள் உள்ளதோடு, மழைநீரை வெளியேற்ற 260 பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,KKCSR ,Ramachandran ,Chennai ,northeast ,
× RELATED தமிழக அரசு உறங்கவில்லை; விழித்துக்...