×

விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 3 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 3 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த பாரா தடகள வீரர் எஸ்.மனோஜ் இந்தோனேசியாவில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றமைக்காவும், ஜெர்மனியில் 28.07.2023 முதல் 5.08.2023 வரை நடைபெற்ற உலக உயரம் குன்றிய மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றமைக்காகவும், விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த தடகள வீரர் ஆனந்தன் அரியானா மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 18வது தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் இரு இடங்களில் வெற்றி பெற்றமைக்காகவும். இந்தோனேசியாவில் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசியன் பாரா விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2-ம் மற்றும் 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றமைக்காகவும் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இளநிலை அலுவலராக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த தடகள் வீராங்கணை ரோஸிமீனா 2021-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 24வது ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள் சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றமைக்காகவும், அதே ஆண்டு ஜுன் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 60வது தேசிய அளவிலான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் 3-ஆம் இடம் பெற்றமைக்காகவும் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் இளநிலை அலுவலராக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு வீரர்கள் எஸ்.மனோஜ், ஆனந்தன் மற்றும் ரோஸிமீனா ஆகியோருக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் 3 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Olympics ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...