×

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாகல்மேடு கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு

பெரியபாளையம், நவ. 2: பெரியபாளையம் அருகே பாகல்மேடு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே பாகல்மேடு கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின், கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நித்யாரதனம், புன்யாவசனம், ரக்ஷா பந்தனம், கும்ப ஸ்தாபனம், மூலவர், உற்சவர் பிம்பங்களுக்கு கர்மாங்க ஸ்நபனம், கலச திருமஞ்சனம், சயனாதிவாசம் உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை, மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், பின்னர், மகாபூர்ணாகுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கோபுர கலசங்கள், மூலவர் உள்ளிட்டவைகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் கோயில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவையுடன் கூடிய மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், மங்கள இசை நிகழ்ச்சி, பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பண்டரி பஜனை, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்களும், பாகல்மேடு கிராம பொதுமக்களும் செய்திருந்தனர். இன்று முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

The post 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாகல்மேடு கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Bagalmedu Kothandaram Temple ,Periyapalayam ,Kothandaram temple ,Bagalmedu ,Periyapalayam.… ,
× RELATED பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு...