×

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி ஊழல் புகார் விசாரணை: லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வா.புகழேந்தி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பருப்பு எண்ணெய் போன்ற பொருட்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து 2018ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதன்மீது 2022ம் ஆண்டு முதல் விரிவான விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருடன் சேர்த்து மூன்று பேர் இதே புகாரை தெரிவித்துள்ளனர். அந்த புகார்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தற்போது விரிவான விசாரணை தொடங்கி உள்ளது. அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. 31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டி உள்ளது. விசாரணை முடியும் முன்பு மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான ரூ.350 கோடி ஊழல் புகார் விசாரணை: லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Corruption Eradication Department ,Chennai ,AIADMK ,
× RELATED தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு வரும் 11ம்தேதி கூடுகிறது