×

கைதான தூத்துக்குடி மீனவர்களின் ஒரு படகுக்கு ரூ.2.27 கோடி அபராதம்: மாலத்தீவு அரசு அதிரடி

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்த நிலையில், மீனவர்களை மட்டும் விடுவிப்பதாகவும், படகை விடுவிக்க ரூ.2.27 கோடி அபராதம் கட்ட வேண்டுமென அந்நாட்டின் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில் வேம்பாரை சேர்ந்த அதிசய பரலோக திரவியம், தருவைகுளத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ், ராமநாதபுரத்தை சேர்ந்த மணி, சக்தி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயகுமார், விக்னேஷ், மதுரையை சேர்ந்த மாதேஷ்குமார் துரைப்பாண்டி உள்பட 12 பேர் கடந்த மாதம் 1ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களை கடந்த 23ம் தேதி மாலத்தீவு கடற்படையினர், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி மூலம் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மாலத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் 12 பேரையும் விடுவித்து விட்டனர். எனினும் படகை விடுவிக்க மறுத்து விட்டனர். ஆனால், மீனவர்கள் படகுடன்தான் சொந்த ஊர் திரும்புவோம் எனக்கூறி அங்கேயே உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அந்நாட்டு பணத்தில் ரூ.42 லட்சம் அபராதம் கட்டிவிட்டு படகை எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளனர். இதன் இந்திய மதிப்பு ரூ.2.27 கோடி எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தருவைகுளத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறுகையில், ‘மாலத்தீவில் உள்ள மீனவர்கள் மற்றும் படகை மீட்பதற்கு ஒன்றிய அரசு தீவிர முயற்சி எடுக்கவில்லை. மீனவர்களாகவே போராடிக் கொண்டிருக்கின்றனர். மீனவர்களை மறுநாளே விடுவிப்பதாக கூறிவிட்டனர். ஆனால், படகுடன்தான் திரும்பி வருவோம் என்று கூறி அங்கேயே உள்ளனர். நேற்று அங்குள்ள அதிகாரிகள் ரூ.2.27 கோடி அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்தனர். ஒரு விசைப்படகு ரூ.80 லட்சம் முதல் 1 கோடிதான் இருக்கும். இதற்கு இவ்வளவு அபராதம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே தொடர்ந்து அபராதம் இல்லாமல் படகை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றார்.

The post கைதான தூத்துக்குடி மீனவர்களின் ஒரு படகுக்கு ரூ.2.27 கோடி அபராதம்: மாலத்தீவு அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Maldivian government ,Thoothukudi ,Maldivian Navy ,Thoothukudi district ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது