×

இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை 7வது வெற்றிக்கு இந்தியா முனைப்பு

மும்பை: ஐசிசி உலக கோப்பையின் 33வது லீக் ஆட்டத்தில், இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியை வசப்படுத்துவதுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி முன்னிலை வகிக்கிறது.

12 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில் வென்றால், முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறும். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். குறிப்பாக, கேப்டன் ரோகித் அமர்க்களமான ஃபார்மில் இருக்கிறார். பந்துவீச்சில் ஷமி, பும்ரா வேகமும், குல்தீப், ஜடேஜா சுழலும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. ஏற்கனவே பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை போட்டுத் தாக்கியுள்ள இந்திய அணி, இலங்கை அணியையும் எளிதாக சமாளிக்கும் என நம்பலாம். எனினும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

* இரு அணிகளும் 167 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதில் இந்தியா 98 – 57 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் ‘டை’, 11 ஆட்டம் ரத்து).

* இந்தியாவில் முழுமையாக நடந்த 51 ஆட்டங்களில் இந்தியா 39, இலங்கை 12 முறை வென்றுள்ளன.

* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் வென்று இந்தியா 5-0 என முன்னிலையில் உள்ளது.

* உலக கோப்பையில் 9 முறை மோதியுள்ளதில், தலா 4 வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. ஆஸியில் 1992ல் நடந்த உலக கோப்பையில் இலங்கை டாஸ் வென்ற நிலையில், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

* வான்கடேவில் நடந்த முதல் ஒருநாள் ஆட்டமே இந்தியா-இலங்கை இடையில்தான். இந்தியா 10 ரன் வித்தியாசத்தில் வென்ற அந்த ஆட்டம் 1987 உலக கோப்பை ஆட்டமாகும்.

* மும்பை வான்கடே அரங்கில் இந்தியா 20 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 11ல் மட்டுமே வென்றுள்ளது.

* இலங்கை அணி இங்கு 5 போட்டியில் 2 வெற்றியை ருசித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் இந்தியாவையும், ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்தையும் வென்றது.

* மும்பையில் இரு அணிகளும் 4வது தடவையாக மோத உள்ளன. ஏற்கனவே மோதிய 3 ஆட்டங்களில் இந்தியா 2-1 என முந்தியிருக்கிறது.

* மும்பையில் இதுவரை நடந்த 25 ஒருநாள் ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணி 14 வெற்றி, சேஸ் செய்த அணி 11 வெற்றி கண்டுள்ளன.

* இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஷர்துல் தாகூர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (காயம்). இலங்கை: குசால் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா, துஷ்மந்தா சமீரா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷான் ஹேமந்தா, திமத் கருணரத்னே, தில்ஷன் மதுஷங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், பதும் நிசங்கா, குசால் பெரேரா, கசுன் ரஜிதா, சமீரா சமரவிக்ரமா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே.

The post இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை 7வது வெற்றிக்கு இந்தியா முனைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Sri Lanka ,Mumbai ,ICC World Cup ,Wangade ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...