×

ரூ.28 லட்சம் மதிப்பு மண் கொள்ளையை தட்டிக்கேட்ட திமுக பெண் கவுன்சிலரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்: கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு விசாரணைக்கு எஸ்பி உத்தரவு

திருப்பத்தூர்: ரூ.28 லட்சம் மதிப்பு மண் கொள்ளையை தட்டிக்கேட்ட திமுக பெண் கவுன்சிலரை அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சரமாரி தாக்கிய சம்பவத்தால் கிராம சபா கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தையொட்டி நேற்று 208 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் கந்திலி ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சியில் அதிகாரிகள் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் தலைமையில் கிராம சபா கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, ‘கிராம சபா கூட்டத்தில் பங்கேற்க ஏன் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. நானும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான்’ என்று பேசினார். மேலும், ‘ஊராட்சியில் பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டது. அதில் ஊராட்சி மன்ற தலைவரான நீங்கள், வண்டல் மண்ணை எடுத்து ரூ.28 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளீர்கள். ஏன் இப்படி கனிம வளத்தை கொள்ளையடித்தீர்கள்’ என்று கவுன்சிலர் லட்சுமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன், ‘உனக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ எனக்கூறி ஆபாசமாக திட்டினாராம். மேலும் தட்டிக்கேட்ட பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் சந்திரசேகரனை ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் சரமாரி தாக்கினாராம். அவரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். படுகாயமடைந்த கவுன்சிலர் லட்சுமியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று திரும்பிய கவுன்சிலர் லட்சுமி, திருப்பத்தூர் எஸ்பி ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார். அதில், ‘கிராம சபா கூட்டத்தில் என்னை ஆபாசமாக பேசியதோடு, தட்டிக்கேட்ட எனது கணவர் சந்திரசேகரனை, ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் அணிந்திருந்த செருப்பை கழட்டி அடித்தார். பின்னர் என்னையும் சராமாரி தாக்கி எட்டி உதைத்தார். எனவே ஊராட்சி மன்ற தலைவர் வில்வநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ரூ.28 லட்சம் மதிப்பு மண் கொள்ளையை தட்டிக்கேட்ட திமுக பெண் கவுன்சிலரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்: கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு விசாரணைக்கு எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK Panchayat Council ,President ,DMK ,Grama Sabha ,Tirupattur ,Panchayat ,ADMK ,
× RELATED திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக...