×

ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு விவகாரம் ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16ம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தாததால் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்.எஸ்.எஸ். சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும் என்றார். காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்றார். இதையடுத்து, இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

The post ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு விவகாரம் ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலாளர், டிஜிபி ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : RSS ,DGP ,Chennai ,76th Independence Day ,Vijayadashami ,Ambedkar ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...