சென்னை: வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன் கடந்த அதிமுக அரசு சட்டப்பேரவையில் அவசர சட்டம் நிறைவேற்றியது. அதன்படி தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அவசர சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,‘‘தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியது சட்ட விரோதம்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வாக்குக்காக இடஒதுக்கீடு வழங்கிய அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரி இருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியது. தையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார். பாமக தலைவர் அன்புமணி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விரைவாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.
பாமக நிறுவனர் ராமதாசும் முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த பிரச்னையில் சாதக, பாதக விஷயங்கள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.