×

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது!

ராஜாராமனுக்கு 52 வயது. கடந்த ஒரு வாரமாக ஒரு கண்ணில் மட்டும் பார்வை சரியாகத் தெரியவில்லை, ஏதோ நடுவில் மட்டும் மறைப்பது போல் தெரிகிறது என்றார். விரிவான பரிசோதனைக்குப் பின் அவருக்கு விழித்திரையின் நடுப்பகுதியான maculaவில் இருக்கும் ரத்த நாளம் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிந்தது. அதனால் அந்தப் பகுதி சரியாக வேலை செய்யவில்லை.

இந்த macula பகுதிதான் கண் பார்வைக்குத் தேவையான முக்கியமான பகுதி. இங்கிருந்து தான் விழித்திரையில் பார்வைக்குத் தேவையான 90% நரம்புகள் புறப்படுகின்றன. சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், ரத்த நாள அடைப்புப் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் தான் சிம்ம சொப்பனம். அவை பார்வையை முழுவதுமாகக் களவாடி விடக்கூடிய தன்மையுடையவை.

ஆனால் ராஜாராமனுக்கு சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு என்று எந்தப் பிரச்சனைகளும் இல்லை. உடல் பருமன் மட்டுமே இருந்தது. அடுத்ததாக அவருடைய விழித்திரையில் வீக்கம் ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிய OCT (optical coherence tomography) என்ற பரிசோதனையைச் செய்யுமாறு பரிந்துரைத்தேன். பொதுவாக உடலில் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டவுடன் சுற்றியுள்ள பகுதிகள் அதற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும். சில சமயங்களில் குறைந்துவிட்ட ரத்த ஓட்டத்தை சீர் செய்வதற்காக புதிய ரத்த நாளங்கள் தோன்றுவதும், அடைப்புக்கு எதிர் வினையாக அருகில் இருக்கும் பகுதிகளில் நீர் கோர்த்துக் கொள்வதும் நடக்கும்.

இவருக்கு ஏற்பட்டிருந்தது superotemporal branch vein என்ற சிரையில் உள்ள பாதிப்பு. அதாவது விழித்திரைக்குள் தூய்மையான (oxygenated blood) ரத்தத்தைக் கொண்டு வரும் ரத்த நாளங்கள் (arteries) சீராக இருந்தன. விழித்திரையிலிருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தத்தை (deoxygenated blood) எடுத்துக் கொண்டு போகும் சிரை (vein) ஒன்றில் தான் அடைப்பு. அதனால் விழித்திரைப் பகுதியில் வீக்கம் ஏற்படுவது இயல்புதான். எதிர்பார்த்தபடியே OCT பரிசோதனையில் குறிப்பிடத்தகுந்த அளவு வீக்கம் இருந்தது. இந்த வீக்கம் மற்றும் அடைப்பு இரண்டும் விழித்திரைப் பகுதியில் ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதைக் காட்டுகிறது. இதனால் அடுத்தடுத்து வேறு சில விளைவுகளும் ஏற்படக் கூடும்.

புதிதாக சில சிறிய ரத்த நாளங்களை (new vessels) உருவாக்க நம் உடல் முனையும். அந்த சிறிய ரத்த நாளங்கள் அடிப்படையில் பலமற்றவை, பயனும் அற்றவை. அதனால் அவற்றிலிருந்து ரத்தக் கசிவு ஏற்பட்டு, ஏற்கனவே குறைந்த நிலையில் இருக்கும் பார்வையும் பறிபோய் விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே ராஜாராமனுக்கு விரைந்து புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் கண் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்களில் ஒன்று, புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்கான (anti VEGF) ஊசியைக் கண்டுபிடித்தது. இதற்கு முன்பாக, குடல் மற்றும் இரைப்பை நிபுணர்களும், புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களுமே இந்த ஊசியைப் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்படும் தீவிரமான புற்று நோய்களுக்கு (colorectal cancer) இந்த ஊசியைச் செலுத்தி வந்தனர். அதனால் அந்தப் பகுதியில் ரத்த நாளங்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்தப்போக்கு ஏற்படுவது குறைந்தது.

இந்த மருந்தையே கண் மருத்துவத்திற்கும் பயன்படுத்தினால் என்ன என்ற யோசனை மருத்துவ விஞ்ஞானிகளுக்கு எழுந்தது. அதை செயல்படுத்தினர். சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக மிக அரிதாகவே இந்த ஊசி கண் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. முன்பெல்லாம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த மருந்தை வாங்க வேண்டும் என்றால் குடல் இரைப்பைப் பிரிவை கண் பிரிவினர் அணுகியது நினைவுக்கு வருகிறது.

அங்கிருந்து தான் கண் மருத்துவப் பிரிவுக்கு மருந்து அனுப்பப்பட்டது. தற்போது இது கண் மருத்துவத்தில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகிவிட்டது. கண் மருத்துவத்திற்கென்று தனியாகவே மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகையின் கீழ் Ranibizumab, Bevazizumab என்று பல மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பரவலாக இந்த ஊசியை பயன்படுத்த ஆரம்பித்த பின் அது கொடுக்கும் நல்ல பலனைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கு OCT பரிசோதனையும் ஒரு காரணம் என்பேன். இதுவும் ஒப்பீட்டு அளவில் சமீபத்தில் கண் மருத்துவத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கருவி தான். எப்படி சிடி, எம்ஆர்ஐ ஸ்கேனில் நம் உடலைப் பல கோணங்களாக வெட்டிப் பார்ப்பது போன்ற புகைப்படங்கள் கிடைக்கின்றனவோ, அதே போல கண் மருத்துவத்திலும் OCT பரிசோதனையில் விழித்திரை அடுக்குகள் பற்றிய வண்ணமயமான, தெளிவான ஒரு அறிக்கையை நீங்கள் பெற முடியும்.

சாதாரணமாக கண்ணாடி பரிசோதனையின் போதோ, கண் அழுத்தப் பரிசோதனையின் போதோ உங்களை ஒரு பயோஸ்கோப் பெட்டி போன்ற பெட்டியின் முன்பு அமர வைத்து ஒரு சிறிய துளைக்குள் பார்க்கச் சொல்வார்கள். அதே போன்ற தோற்றமுடைய கருவி தான் இதுவும். ஒரு பொத்தானை அழுத்தியவுடன் கண்களுக்குள்ளாக ஒளிக் கற்றைகள் பாய்ச்சப்பட, விழித்திரையில் பட்டு அவை மீள கருவிக்குள் வருகையில், கருவி அதைப் பதிவு செய்து விரிவாகத் தன் அறிக்கையைத் தருகிறது.

விழித்திரைக்கு பத்து அடுக்குகள் உண்டு என்பதை நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். அவற்றின் நீளம், அகலம், தடிமன் இவை இந்தப் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றன. விழித்திரையில் எங்காவது ஓட்டை இருந்தாலும் வீக்கம் இருந்தாலும் இந்தப் படம் காட்டிக் கொடுத்துவிடும்.

ராஜாராமனுக்கு விழித்திரையின் macula பகுதியில் 570 மைக்ரான் அளவிற்கு வீக்கம் இருந்தது.‌(வழக்கமாக 275-280 மைக்ரான் தான் இருக்கும்). ஊசியை செலுத்தி மூன்று வாரங்கள் கழித்து அந்த வீக்கம் வெகுவாகக் குறைந்து 300 மைக்ரான் அளவிற்கு வந்திருந்தது. பார்வையும் Snellen s chart ல் முன்பை விட இரண்டு வரிகள் அதிகம் வாசிக்கும் அளவிற்கு முன்னேற்றம் இருந்தது. ‘‘ஒரு மாத இடைவேளையில் பரிசோதனைக்கு வாருங்கள், இதே நிலையில் இருக்கிறது என்றால் இந்த ஒரு ஊசியுடன் நிறுத்திக் கொள்ளலாம், தேவைப்பட்டால் இன்னும் ஒன்றிரண்டு ஊசிகள் செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவரிடம் கூறினேன்.

அவருக்கு செலுத்தப்பட்ட ஊசி ஆறுவாரங்கள் வரை செயலாற்றக்கூடியது. சில வகை ஊசிகள் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை மீண்டும் செலுத்த வேண்டியதாக இருக்கும். பாதிப்பின் தன்மையைக் குறித்து எத்தனை ஊசிகள் தேவைப்படும் என்பதை மருத்துவர் நிர்ணயிப்பார்.ரத்த நாள அடைப்புக்கு முக்கியக் காரணம் இதயம் மற்றும் பிற தமனிகளில் ஏற்படும் மாற்றங்கள் தான். இதயத்திலிருந்து புறப்படும் தமனிகள் கழுத்து வழியே பயணித்து தலையின் பின்பகுதி வழியே மூளைக்குள் நுழைகின்றன.

அங்கிருந்து பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கண்ணிற்கும் ஊட்டம் அளிக்கின்றன. கழுத்துப் பகுதியில் இருக்கும் internal carotid artery என்ற‌ ரத்தநாளத்தின் உட்புறத்தில் தடிமனாகக் கொழுப்பு (atheroma) படிந்திருந்தால், அதிலிருந்து ஒரு சிறிய துகள் (embolus) பிரிந்து போய் மிகச் சிறிய இரத்த நாளங்களை அடைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதயம் மற்றும் கழுத்து பகுதிக்கான Echocardiogram and carotid Doppler பரிசோதனையை அவருக்கு மேற்கொண்டோம். அவற்றில் எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை. இயல்பாகவே இருந்தது.

இருந்தும் மேற்கொண்டு ரத்த நாளடைப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காக உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முதலிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை‌ அவருக்கு விளக்கிக் கூறி, இது தொடர்பாகப் பொது மருத்துவரிடமும் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினேன். ‘‘என் உடன் பிறந்தவர்கள், பெற்றோர் என்று சிலருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ரத்தநாள அடைப்பினால்‌‌ விளைந்த நோய்களை எதிர்கொண்டிருக்கிறேன், எனவே கவனமாக இருப்பேன்” என்றார் ராஜாராமன்.

வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களை முன்பு மாதிரி செய்ய முடியாது தான், இருந்தாலும் குடும்பத்தினருக்கு வந்த நோய்களை ஒப்பிடுகையில் தனக்கு வந்த பிரச்சனை மிகச் சிறியதே என்பதையும் தெரிந்த கொண்டார். ‘‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிடுச்சுன்னு நினைச்சுக்கிறேன்..” என்றார்.

பார்வதி என்று இன்னொரு நோயாளி. இவருக்கும் இதே மாதிரியான ஒரு பிரச்சனை தான். ஆனால் ராஜாராமனுக்கு ஏற்பட்டதை விட சற்றுப் பெரிய பிரச்சனை. ராஜாராமனுக்கு ஒரு சிறிய கிளை ரத்த நாளம் (branch vein) அடைந்து கொண்டது என்றால் இவருக்கு வலது கண்ணில் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் முக்கிய சிரையான central retinal vein அடைத்துக் கொண்டிருந்தது.

இவருக்கும் இதயம், கழுத்துப் பகுதி ஸ்கேன் உட்பட அனைத்து பரிசோதனைகளையும் செய்து, மேற்கூறிய அதே ஊசியையும் செலுத்தினோம். இவருக்கு பார்வை அதிக அளவில் பாதித்திருந்தது.‌சிறிய ரத்த நாளம் அடைத்துக்கொள்வதை விட இது தீவிரமான பிரச்சனை என்பதால் பின் கவனிப்பை மிகத் தீவிரமாக செயலாற்ற வேண்டும். அதிகத் தொல்லை கொடுக்கும் வேறு சில பிரச்சனைகளையும் எதிர்பார்க்கலாம். தேவைப்பட்டால் லேசர், அறுவை சிகிச்சை போன்ற அடுத்தடுத்த சிகிச்சைகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.

Tags : Akilanda Bharti ,Rajaraman ,Dinakaran ,
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!