×

கிளாஸ்கோ மாநாட்டில் கடைசி நேரத்தில் இந்தியா திடீர் பல்டி நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்க முடியாது படிப்படியாக குறைக்க மட்டுமே முடியும்: திருத்தத்துடன் நிறைவேறியது புதிய பருவநிலை ஒப்பந்தம்

கிளாஸ்கோ: நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவது என்பதற்கு பதிலாக, படிப்படியாக குறைப்பது என இந்தியா கொண்டு வந்த கடைசி நிமிட மாற்றத்துடன் புதிய பருவநிலை ஒப்பந்தம் கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நிலக்கரி பயன்பாட்டை குறைக்க சுமார் 200 நாடுகள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ள முதல் ஐநா தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் சிஓபி26 எனும் ஐநா பருவநிலை உச்சி மாநாடு கடந்த 2 வாரங்களாக நடந்தது. வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த இந்த மாநாட்டில் இறுதி தீர்மானம் நிறைவேற்றுவதில் பல்வேறு நாடுகளுடன் உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனால், ஒருநாள் கூடுதலாக நேற்று முன்தினமும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. புவி வெப்பநிலையை 1.5 டிகிரிக்கு மேல் உயராமல் தடுக்க வேண்டும் என 2015 பாரீஸ் பருவநிலை மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உலகில் கார்பன் உமிழ்வில் 40 சதவீதம் நிலக்கரியால்தான் நிகழ்கிறது. எனவே, புவி வெப்பமயமாதலை குறைக்க, நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாக நிறுத்த வேண்டுமென கிளாஸ்கோ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. நிலக்கரி தொடர்பான திட்டங்களுக்கு அளிக்கும் மானியத்தை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என வரைவு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இந்தியா தலைமையில் சில நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மாநாட்டில் பேசுகையில், ‘‘வறுமை ஒழிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை நிறைவேறாத நிலையில், வளரும் நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தும் என எப்படி வாக்குறுதி தர முடியும்? எங்கள் நாட்டில் விறகு அடுப்புகள் பயன்படுத்துவதை தவிர்க்க ஏழை மக்களுக்கு இலவசமாக காஸ் இணைப்பும், மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் காற்று மாசை தடுக்கும், படிம எரிபொருள் பயன்பாட்டை தடுக்கும் மானியமே. இதை எவ்வாறு நிறுத்த முடியும்? எனவே தீர்மானத்தில் அனைவருக்கும் பொதுவானதாக திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்’’ என வாதாடினார்.இதற்கு சிறு தீவு நாடுகள் உட்பட வளர்ந்த நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இறுதியில் இந்தியா கொண்டு வந்த திருத்தத்துடன் வரைவு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தீர்மானத்தில் நிலக்கரி பயன்பாட்டை, ‘படிப்படியாக ஒழிப்பது’ என்பதற்கு பதிலாக, ‘படிப்படியாக குறைப்பது’ என மாற்றப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள ஏழை, வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் ஆண்டுதோறும் ரூ.7.5 லட்சம் கோடி நிதி உதவி செய்வது, 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பாதியாக குறைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுமார் 200 நாடுகள் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது என வெளிப்படையாக ஒப்புக் கொண்ட முதல் ஐநா தீர்மானம் இது. இந்த தீர்மானம் பருவநிலை மாற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நிறைவடைந்துள்ளது.இந்தியாவுக்கு வசைமழைநிலக்கரி பயன்பாட்டிற்கு ஆதரவாக இந்தியா, பருவநிலை மாநாட்டில் பேசியதற்கு பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. இந்தியாவின் மாற்றத்தால் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் இலக்கை எட்ட முடியாது என சுவிட்சர்லாந்து அமைச்சர் சிமோனட்டா கவலை தெரிவித்தார். இந்தியாவின் கடைசி நிமிட மாற்றம் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் ஆய்வாளர் பில் ஹாரே, ‘‘பருவநிலை நடவடிக்கைகளில் நீண்ட தடுப்பாளராக இருக்கும் இந்தியா, இவ்வளவு வெளிப்படையாக நடந்து கொண்டு இதுவரை பார்த்ததில்லை,’’ என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ‘இந்தியாவின் மாற்றத்தால் சில பிரச்னைகள் ஏற்படலாம் என்றாலும் இது ஒரு நல்ல ஒப்பந்தம்,’ என அமெரிக்க தூதர் ஜான் கெர்ரி தெரிவித்தார். நிலக்கரிக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா காலநிலை பேரழிவுக்கு தலைமை தாங்குவதாக குட்டித் தீவு நாடுகள் கவலை தெரிவித்தன.பூஜ்ய உமிழ்வு பூஜ்ஜியமாகிவிடும்ஐநா தலைமைச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் கூறுகையில், ‘பூமி ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பருவநிலை பேரழிவின் கதவை நாம் இன்னும் தட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் இன்னும் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஜ்ய கார்பன் உமிழ்வை அடையும் வாய்ப்பு பூஜ்ஜியமாகி விடும்,’ என எச்சரித்தார்….

The post கிளாஸ்கோ மாநாட்டில் கடைசி நேரத்தில் இந்தியா திடீர் பல்டி நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்க முடியாது படிப்படியாக குறைக்க மட்டுமே முடியும்: திருத்தத்துடன் நிறைவேறியது புதிய பருவநிலை ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Glasgow conference ,India ,Glasgow ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!