×

தீபாவளிக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளராக குமரகுருபரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து துறை சார்ந்த அறிமுகக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதன் பின் அவர் அளித்த பேட்டி: தீபாவளி முடிந்ததும், பொதுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை அறிவிப்பு வெளியிடப்படும். ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக என்னிடம் பேசினர். ஆர்ப்பாட்டம், போராட்டம் என அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிறார்கள்.

நீதிமன்றத்தில் இருந்து இன்னும் ஆசிரியர் பணியிடங்களை ஏன் நிரப்பாமல் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி வருகிறது. 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் கோரிக்கை வைக்கிறார்கள். 2014, 2017, 2019, 2022ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் ஆலோசனை செய்து, அதற்கு தகுந்தாற்போல், மாற்று ஏற்பாடு என்ன செய்ய முடியுமா என்பதற்கான சில வழிமுறைகளை முதன்மை செயலாளரிடம் முன்வைத்துள்ளோம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அலுவலகம் வாயிலாக மாற்று ஏற்பாடுகளை சொல்ல இருக்கிறோம். அதற்கேற்ப முடிவெடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தீபாவளிக்கு பிறகு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Anbil Mahesh ,Chennai ,Kumaraguruparan ,Tamil Nadu School Education Department ,Diwali ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...