×

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை உடைத்த விவகாரம் பாஜ நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: ஸ்டார் ஓட்டல் உணவுகளை கேட்டு அடம்பிடிக்கிறார்

* 3ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாஜ கொடி கம்பத்தை அகற்றும்போது நடந்த மோதல் தொடர்பாக, போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், ‘அமர் பிரசாத் ரெட்டி போலீசாருக்கு ஒத்துழைக்கவில்லை’ என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கானாத்தூர் பகுதியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. அண்ணாமலை வீட்டின் முன்பு முன்் அனுமதி இல்லாமல் நடப்பட்ட கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமையில் வந்த கட்சியினர், கொடி கம்பத்தை அகற்ற பயன்படுத்தப்பட்ட ‘கிரேனை’ உடைத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் படி கானாத்தூர் போலீசார், பாஜ மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், அரசுக்கு சொந்தமான வாகனத்தை உடைத்த வழக்கில் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கானாத்தூர் போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின்போது, நீதிமன்றம் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து கானாத்தூர் போலீசார், பாஜ மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணைக்கு பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சரியாக ஒத்துழைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதேநேரம், அவர் ‘சங்கீதா மற்றும் அடையார் ஆனந்தபவன்’ ஓட்டல்களில் அவருக்கு பிடித்த உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். போலீசாரும் அவர் கேட்ட அனைத்து உணவுகளையும் வாங்கி கொடுத்தனர். ஆனாலும் அவர் மாநகராட்சி வாகனத்தை உடைத்தது குறித்து உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் இரவு 12 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் மேல் உள்ள காவலர்கள் தங்கும் அறையில் தான் அமர் பிரசாத் ரெட்டி தூங்கினார். காலையில் சங்கீதா ஓட்டலில் இருந்து வந்த ‘காபி’யை சுடாக வாங்கி குடித்தார். பிறகு காலை உணவாக இட்லி, சாம்பார் வடை கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். ஒரு நாள் காவலில் அவர் சாப்பிடுவதற்கே முக்கியத்துவம் அளித்தாரே தவிர போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல், தெரியாது என்று ஒன்றை வரியில் பதில் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாள் காவல் முடிந்து நேற்று பிற்பகல் மீண்டும் பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, செந்தில், வினோத், சுரேந்தர், ஆகிய 4 பேரையும் மீண்டும் ஆலந்தூர் 2வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்திரபிரபா முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் 4 பேரையும் வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைதொடர்ந்து போலீசார் அமர் பிரசாத் ரெட்டி உட்பட 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

The post சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை உடைத்த விவகாரம் பாஜ நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: ஸ்டார் ஓட்டல் உணவுகளை கேட்டு அடம்பிடிக்கிறார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Amarprasad Reddy ,Chennai Municipal Corporation ,Star hotel ,Chennai ,Chennai Corporation ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...