×

கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் பைக் திருடனை விரட்டி பிடித்த இன்ஸ்பெக்டர்: துணிச்சலை பாராட்டி டிஜிபி ரூ.10,000 பரிசு

சூலூர்: கோவை சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 3 மணி அளவில் நீலாம்பூர் எல்என்டி பைபாஸ் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, பைக்கில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தனர். இன்ஸ்பெக்டர் மாதையன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. பதில் கூறமுடியாத வாலிபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பினர். உஷரானா போலீசார் அவர்களை விரட்டினர். இரவு நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் விடாமல் விரட்டினர். முதலிபாளையம் பிரிவு அருகே வந்தபோது வாலிபர்கள்  பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடி முயன்றனர். அதில் ஒருவரை இன்ஸ்பெக்டர் மாதையன் பிடித்தார். வாலிபர் தப்பிஓட முயன்றார். இதில், இன்ஸ்பெக்டர் மாதையனின் சட்டை கிழிந்தது. இருந்தும் வாலிபரை இன்ஸ்பெக்டர் மடக்கிப்பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அங்கு நடத்திய விசாரணையில் அவர், ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரை சேர்ந்த பழனியப்பன் மகன் ஹரிஹரசுதன் (23) என்பதும், பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது. தப்பி ஓடியவர் கோவை டவுன்ஸ்ஹால் பகுதியை சேர்ந்த சங்கர் (32) என்று பிடிபட்டவர் கூறினார். இதனையடுத்து அவரையும் போலீசார் சல்லடை போட்டு தேடினர். கோவை நீலாம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த சங்கரை போலீசார் நேற்று இரவு பிடித்தனர். சங்கரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருக்கும் பைக்குகளை திருடி விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 2 திருட்டு பைக்குளை போலீசார் பறிமுதல் செய்தனர். சினிமா பாணியில் கொள்ளையர்களை விரட்டி கட்டிப்புரண்டு பிடித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்பெக்டர் மாதையனை இந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த தகவல் தமிழக டிஜிபி சைலேந்திராபாபுவுக்கு தெரியவந்தது. துணிச்சலாக போராடிய இன்ஸ்பெக்டர் மாதையனை பாராட்டி அவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்….

The post கோவையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம் பைக் திருடனை விரட்டி பிடித்த இன்ஸ்பெக்டர்: துணிச்சலை பாராட்டி டிஜிபி ரூ.10,000 பரிசு appeared first on Dinakaran.

Tags : Soolur ,Chulur ,Inspector ,Mathayan ,Govai Chulur ,LNT ,Dinakaran ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு