×

கொச்சி குண்டு வெடிப்பு விரைவில் என்ஐஏ விசாரணை: கைதான டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைப்பு

திருவனந்தபுரம்: கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொச்சி களமசேரியிலுள்ள ஒரு அரங்கத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன் யகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பு நடத்திய ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடித்து 12 வயது சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 51 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக திருச்சூர் அருகே உள்ள கொடகரை போலீஸ் நிலையத்தில் கொச்சி தம்மனம் பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் (57) என்பவர் சரணடைந்தார். இதற்கிடையே குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயமடைந்த 21 பேர் தற்போதும் எர்ணாகுளம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 16 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையே டொமினிக் மார்ட்டினை நேற்று போலீசார் வெடி பொருளை வாங்கி வைத்திருந்த ஆலுவா அத்தாணி பகுதியிலுள்ள அவரது குடும்ப வீடு, அவர் தங்கியுள்ள கொச்சி தம்மனத்திலுள்ள வீடு மற்றும் குண்டு வெடிப்பு நடந்த ஜெபக்கூட்ட அரங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொச்சி துணை போலீஸ் கமிஷனர் சசிதரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த இடங்களில் நடந்த விசாரணைக்குப் பின்னர் டொமினிக் மார்ட்டினை போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post கொச்சி குண்டு வெடிப்பு விரைவில் என்ஐஏ விசாரணை: கைதான டொமினிக் மார்ட்டின் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kochi ,NIA ,Dominic Martin ,Thiruvananthapuram ,Christian ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...