×

விமானதுறை இயக்குனர் ஆய்வு செய்ததும் விரைவில் விமானங்கள் இயக்கப்படும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தகவல் வேலூர் விமான நிலையத்தில் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்தது

வேலூர், நவ.1: வேலூர் விமான நிலையத்தில் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் விமானதுறை இயக்குனர் ஆய்வு செய்ததும் விரைவில் விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் வேலூர் விமான நிலையம் உட்பட கைவிடப்பட்ட சிறிய விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. இதில் வேலூர் அப்பதுல்லாபுரம் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர ₹65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கி விமானங்கள் பறப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது. விமான நிலையத்திற்கு சொந்தமாக இருந்த 46 ஏக்கருடன் அரசு நிலம் 52 ஏக்கரை கையகப்படுத்தி மாநில அரசு கொடுத்த நிலையில் தற்போது 97 ஏக்கர் பரப்பளவில் 850 மீட்டர் ஓடுதளத்தில் 748 மீட்டரை விமானங்கள் இறக்கி, ஏற்றவும், மீதமுள்ள இடத்தில் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய நிர்வாக அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள், பாதுகாப்பு இடம் என அனைத்துப்பணிகளும் ஏறக்குறைய முடிந்துள்ளது.

இதனால் முதல்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு இயக்க சிவில் விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. தற்போது வேலூர் விமான நிலையத்தில் சுற்றுச்சுவர் பணிகள், சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் உட்பட இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து விமான நிலையத்தை இயக்குவதற்கு லைசென்ஸ் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பணியாற்ற உள்ள தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சியும் சென்னை விமான நிலைய ஆணைய குழுமத்தின் மூலம் வழங்கப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் தலைமையில் 25 உள்ளூர் போலீசாருக்கு விமான நிலைய பாதுகாப்பு, கண்காணிப்பு தொடர்பான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கேற்ப இந்த ஆண்டு இறுதிக்குள் இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக கடந்த 1ம் தேதி டெல்லியில் இருந்து காலிபர் ரக விமானம் சென்னை வழியாக வேலூர் விமான நிலையம் வந்தது. இந்த விமானம் குறிப்பிட்ட உயரத்தில் 10க்கும் மேற்பட்ட முறை தாழ்வாக பறந்தும், குறிப்பிட்ட உயரத்தில் இருந்து சிக்னல்கள் கிடைக்கிறதா என்றும் சோதனை மேற்கொண்டது. மேலும் இந்த சோதனையை டெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தை சேர்ந்த 3 பேர் ஆய்வு செய்தனர்.

இதில் விமான ஓடுதளத்தில் விமானங்கள் இறங்குவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல் வேளையில் சரியாக எரிகிறதா?, விமானத்தில் இருந்து தகவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரத்தில் இருந்து கிடைக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் அடுத்த சில நாட்களில் மீண்டும் டெல்லியில் இருந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் வேலூர் விமான நிலையத்தில் இறுதிக்கட்ட ஆய்வை மேற்கொள்வார் என்றும், அதன்பிறகு இங்கு விமானங்கள் இயக்குவதற்கான முறையான அனுமதி கிடைக்கும் என்றும் தெரிகிறது. இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் விமான நிலையத்தில் சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான இறுதிகட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. எனவே வருகிற டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வேலூரில் இருந்து விமானங்கள் பறக்கும்’ என்றனர்.

The post விமானதுறை இயக்குனர் ஆய்வு செய்ததும் விரைவில் விமானங்கள் இயக்கப்படும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தகவல் வேலூர் விமான நிலையத்தில் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்தது appeared first on Dinakaran.

Tags : Director of Aviation ,Vellore airport ,Vellore ,of Aviation ,Aviation ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...