×

ஒன்றிய அரசின் கடன் வழங்குவதாக கூட்டம் போலீஸ் வந்ததும் பாஜ நிர்வாகியான நடிகை நமீதா கணவருடன் எஸ்கேப்: அரசு சின்னம், தேசிய கொடியுடன் காரில் உலா வந்த 2 பேர் கைது

சேலம்: ஒன்றிய அரசின் கடன் வழங்குவதாக தொழிலதிபர்கள், வங்கி அதிகாரிகளுடன் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது போலீஸ் வந்ததால், பாஜ நிர்வாகியான நடிகை நமீதா கணவருடன் தப்பினார். அரசு சின்னம், தேசிய கொடியுடன் காரில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. இதில், அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60), செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் (34), தமிழ்நாடு சேர்மனான பாஜவின் மாநில செயற்குழு உறுப்பினரான நடிகை நமீதாவின் கணவர் எம்.வி. சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். வங்கி அதிகாரிகள், தொழிலதிபர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனிடையே முத்துராமன் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், இவர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் பயன்படுத்திய காரில் அரசு சின்னம் பொருத்தப்பட்டிருந்தது. தேசிய கொடியையும் கட்டியிருந்தனர். இதுபற்றி முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது, முத்துராமன் 3ம் வகுப்பு வரை படித்திருப்பதும், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை கான்ட்ராக்டராக இருந்ததும், டெல்லி சென்றபோது பிஎஸ்சி பட்டதாரியான துஷ்யந்த் யாதவுடன் பழக்கம் ஏற்பட்டதும் தெரிந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த அமைப்பை தொடங்கியுள்ளனர். இவர்களது விசிட்டிங் கார்டிலும் அரசு சின்னத்தை பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்று மதுரையிலும் கூட்டம் நடத்தியுள்ளனர். இரண்டாவது முறையாக சேலத்தில் நடத்தியுள்ளனர். இவர்கள் கடன் பெற்றுக் கொடுப்பதாக கூறி ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முத்துராமன், துஷ்யந்த் யாதவ்(34), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தேசிய கொடியை பயன்படுத்தியது, அரசு எம்பளத்தை பயன்படுத்தியது, கடன் வாங்கித் தருவதாக ஏமாற்ற முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவர்களிடம் இருந்து தேசிய கொடி கட்டிய காரை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் ஓட்டலில் விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில், நடிகை நமீதாவும் அவரது கணவர் சவுத்ரியும் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து வெளியேறி விட்டனர். சவுத்ரிதான் இந்த அமைப்பின் தமிழக தலைவராக இருந்துள்ளார். இந்த அமைப்புக்கு நமீதா கணவர் தலைவரானது எப்படி? அவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? நமீதா பா.ஜவில் இருப்பதால் அவர் மூலமாக ஏதாவது இவர்கள் ஆதாயம் அடைந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

The post ஒன்றிய அரசின் கடன் வழங்குவதாக கூட்டம் போலீஸ் வந்ததும் பாஜ நிர்வாகியான நடிகை நமீதா கணவருடன் எஸ்கேப்: அரசு சின்னம், தேசிய கொடியுடன் காரில் உலா வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Actress ,Namitha ,BJP ,Union government ,Salem ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...