×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதல்வர் பங்கேற்க இருக்கும் விழா மேடை இடத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் 86 ஏக்கரில் ரூ.394 கோடி மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது, சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பயணிகளின் வசதிகளுக்காகவும் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில், ‘மழை நீர் வெள்ளம் போல தேங்கி’ கடல் போல் காட்சியளித்து வருகிறது. இதனால், மழைகாலத்தில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதில், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிக்கி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் மழைநீர் போகும் வகையில் மேம்பாலங்களை அமைக்காமல் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தால் ஆட்சிக்கு அவர் பெயர் ஏற்படும் என்பதால், பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கடந்த 2 ஆண்டுகளாக தள்ளிப்போனது.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமையில், சிஎம்டிஏ மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து வருகிற 15ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறினார். பின்னர், பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அசம்பாவிதம் நடக்காத வகையில் 3,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருக்கைகளை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2013ம் ஆண்டு சரியான முறையில் திட்டமிடப்படாமல் 86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கி, 2019ல் தொடங்கிய பணி மந்தகதியில் நடைபெற்று வந்தன. இதனால், பேருந்து நிலைய திறப்பு விழா தள்ளிப்போனது. இதில், திமுக ஆட்சிக்கு வந்ததும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும், பருவ மழை முன்னெச்சரிக்கையை முன்னிட்டும், பயனாளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து தரவும் முழு வீச்சில் திட்டமிடப்பட்டு கூடுதலாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல், ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே 2 நாளில் இரவோடு இரவாக ராட்சத ரெடிமேட் மழைநீர் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பொழுதுபோக்கு பூங்காவும் அமைக்கப்படும். பேருந்து நிலையம் திறந்ததும், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். மேலும், பேருந்து நிலையத்தில் மற்றொரு புதிய நுழைவாயில் 40 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்படும். இதில் பயனாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனி பேருந்து நிலையம் அமைக்கும் பணி முடிச்சூரில் முடிக்கப்படும். இந்த, ஒட்டுமொத்த பணிகளையும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைப்பார். மேலும், வருகிற 12ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் 15 முதல் 20ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக தள்ளிப்போன கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறப்பு விழா, வருகிற 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திறக்கப்படலாம் அல்லது பொங்கல் தினத்தன்று திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதல்வர் பங்கேற்க இருக்கும் விழா மேடை இடத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Chief Minister ,Klambakkam Bus Station ,Kuduvanchery ,Klambakan ,post ,Klambakan bus station ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...