×

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்: வியாசர்பாடி சாமியார் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு 9 மணிக்கு இவரது கடைக்கு வந்த ஒருவர், ரூ.200 நோட்டை கொடுத்து ரூ.10க்கு பொருள் கேட்டுள்ளார். அந்த நபர் ஏற்கனவே ஒரு முறை இதேபோன்று ரூ.200 நோட்டை கொடுத்து பொருள் வாங்கிய நிலையில், நோட்டு சற்று வித்தியாசமாக இருந்ததால், சந்தேகமடைந்த கடை உரிமையாளரான ராஜேந்திரன் அந்த ரூ.200 நோட்டை சரிபார்த்தபோது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது.

உடனடியாக, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்துவைத்து, வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி மகாத்மா காந்தி 3வது தெருவை சேர்ந்த முகமது இத்ரியாஸ் (40) என்பதும், சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை நடைபாதையில் உணவு கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. திருவொற்றியூரை சேர்ந்த முகமது உசேன் (60) என்பவரிடம் இருந்து ரூ.2000 கொடுத்து ரூ.4000க்கு ரூ.200 கள்ள நோட்டுகளை வாங்கி, அதை கடைகளில் மாற்றியதும், மீண்டும் ரூ.5000 மற்றும் ரூ.10 ஆயிரம் கொடுத்து ரூ.200 கள்ள நோட்டு வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து திருவொற்றியூரை சேர்ந்த முகமது உசேன் மற்றும் கள்ள நோட்டு மாற்றுவதற்கு உதவியாக இருந்த அவரது நண்பர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பசுலுதீன் (60) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், முகமது உசேன், கொடுங்கையூரை சேர்ந்த ரசூல் மற்றும் ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த முபாரக் ஆகிய இருவரிடம் இருந்து கள்ள நோட்டுக்களை பெற்று புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, ரசூல் மற்றும் முபாரக் ஆகிய இருவரையும் வியாசர்பாடி போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்தால் கள்ள நோட்டுகளை எங்கிருந்து இவர்கள் வாங்குகிறார்கள் என்பது குறித்து முழு தகவல்களும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajendran ,Vyasarpadi Samiyar Garden 3rd Street ,Erukkancheri highway ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு