×

மெஸ்சிக்கு உலகின் உயரிய விருது: 8வது முறையாக வென்று சாதனை

பாரிஸ் : அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி கால்பந்து உலகின் மிக உயரிய விருதான `பலோன் டிஆர்’ விருதை 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். பிரெஞ்சு கால்பந்து இதழான `பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதில் சிறந்த வீரருக்காக அளிக்கப்படுவது `பலோன் டிஆர்’ எனும் உயரிய விருது ஆகும். இந்த ஆண்டுக்கான பலோன் டிஆர் விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் ஆண்கள் பிரிவில் 30 பேர் இடம் பெற்று இருந்தனர்.

ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான காலகட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு இந்த தேர்வு நடைபெற்றது. முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னணி கால்பந்து வீரர்களான கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்சி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். பின்னர் அதில் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டுக்கான பலோன் டி’ஆர் விருதை வென்றதாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர் எம்பாப்பே இந்த முறை விருதை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அவருக்கும், மெஸ்சிக்கும் இடையேதான் அதிக போட்டி இருந்தது. ஆனால், இறுதியில் மெஸ்ஸி வென்று இருக்கிறார். மெஸ்சி 8வது முறையாக பலோன் டிஆர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றது. அந்த அணியின் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் இருந்து அந்த அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 8வது முறையாக பலோன் டிஆர் விருதை வென்றுள்ள மெஸ்சி, 2009ஆம் ஆண்டு தன் முதல் விருதை வென்றார். பின் 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021இல் இந்த விருதை வென்று உள்ளார். முன்னதாக இதுவரை பலோன் டிஆர் விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்தார். தற்போது இந்த விருதை அதிகமுறை வென்ற வீரர் என்ற பெருமையையும் மெஸ்சி பெற்றுள்ளார்.

The post மெஸ்சிக்கு உலகின் உயரிய விருது: 8வது முறையாக வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Messi ,Paris ,Lionel Messi ,
× RELATED பாரிஸ் ஸ்குவாஷ் வேலவன் சாம்பியன்