கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே கூழையாறு கிராமத்தில் பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்று கடலோர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு துறைமுகம் அருகாமையில் துவங்கி கடற்கரை ஓரமாக வேதாரண்யம் வரை பக்கிங்காம் கால்வாய் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்த கால்வாய் மூலம் நீர்வழி போக்குவரத்து நடைபெற்றது. பல வகையான பொருட்கள் சென்னை பகுதியிலிருந்து கடற்கரையோர பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, இந்த கால்வாய் நீர் வழி போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வந்தது. வேதாரண்யம் பகுதியிலிருந்து உப்பு எடுக்கப்பட்டு இந்த கால்வாய் மூலம் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காலப்போக்கில் நீர்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த பக்கிங்காம் கால்வாயில் படிப்படியாக நீர்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால்வாய் இன்றும் நீர்வழி போக்குவரத்து நடைபெற்றதற்கான ஆதாரமாகவே இருந்து வருகிறது. இந்த கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டும் அதன் இயற்கையான அகலம் மற்றும் ஆழம் குறைந்தும் காணப்படுகிறது. சில இடங்களில் கால்வாய் முழுவதும் மூடப்பட்டு கிடக்கிறது. கூழையாறு கிராமத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாய் முழுவதுமாக நெய்வேலி காட்டாமணக்கு செடிகள் உள்ளிட்ட புதர் மண்டி மூடி கிடக்கிறது.
The post பக்கிங்காம் கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.