×

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தூய்மை பணி கடற்கரை குப்பையில் 25 சதவீதம் பிளாஸ்டிக்: தன்னார்வலர்கள் தகவல்

சென்னை: பட்டினப்பாக்கம் கடற்கரையில் தன்னார்வலர்கள் மேற்கொண்ட தூய்மை பணியில், மதுபாட்டில்கள் மற்றும் மருந்து பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மொத்த குப்பையில் 25 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு மனிதர்களுக்கு எந்த அளவுக்கு தீமையாக இருக்கிறதோ, அதைவிட மோசமாக வனவிலங்குகளையும் கடல்வாழ் உயிரிகளையும் பாதிக்கிறது. உலக அளவில் 40 சதவீத கடல் பரப்புகளை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளன. இதே விழிப்புணர்வு அற்ற நிலை தொடர்ந்து, 2050ம் ஆண்டு வாக்கில், கடலில் இருக்கும் மீன்களை விட, அதில் இருக்கும் பிளாஸ்டிக்கின் எடை அதிகமாக இருக்கும் என்று புள்ளிவிவரம் ஒன்று அச்சுறுத்துகிறது என்று ஆய்வறிக்கை ஒன்று சொல்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கடலோரப் பகுதிகளில் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் முதல் 25 லட்சம் டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. கடலில் குவியும் கழிவுகளை பறவைகளும் சாப்பிட்டு அழிகின்றன. 90 சதவீத கடல் பறவைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப்படுத்த பணியின் போது இருமல் சிரப் மற்றும் மருந்து பாட்டில்கள் அதிகளவில் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘பிராண்ட் ஆடிட்’ எனப்படும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தின் தன்னார்வலர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுமார் 11 கிலோ குப்பைகளை சேகரித்துள்ளனர்.

சேகரிக்கப்பட்ட மொத்த கழிவுகளில் சுமார் 25% பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ரப்பர்கள், 15% சிகரெட் துண்டுகள், லைட்டர்கள், சுருட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் என 17 வகையான மருத்துவ கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாம்பு கவர், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் கவர்கள் இருந்தன. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது: கடற்கரையில் மது பாட்டில்களுடன் சிரப் பாட்டில்களைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைய செய்கிறது. அதேபோல் கடற்கரைகளில் மக்கள் எப்படி மருந்துகளை உட்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. இதனிடையே மீனவர்களின் வீடுகள் கடற்கரையில் இருந்து அருகில் இருப்பதால், தினசரி நடவடிக்கைகள், அன்றாட செய்யக்கூடிய செயல்களுக்கும் கடற்கரையை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதனால் மருந்து பொருட்கள் போன்ற குப்பை இருக்கலாம். இதனிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டை 2040ம் ஆண்டிற்குள் குறிப்பாக இந்த பகுதியில் 75 சதவீதம் குறைக்கும் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இவ்வாறாக கடற்கரையிலிருந்து குப்பை சேர்வதற்கு குப்பைத் தொட்டிகள் இல்லாததே முக்கிய காரணமாக இருக்கக்கூடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு கடற்கரைதோறும் குப்பை தொட்டிகளை ஆங்காங்கே வைப்பதன் மூலம் கடற்கரை மணலில் குப்பை சேகரமாவது குறைக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பட்டினப்பாக்கம் கடற்கரையில் தூய்மை பணி கடற்கரை குப்பையில் 25 சதவீதம் பிளாஸ்டிக்: தன்னார்வலர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pattinpakkam ,CHENNAI ,Pattinpakkam beach ,Dinakaran ,
× RELATED பட்டினப்பாக்கம் முகத்துவாரத்தில் ஆண் சடலம் மீட்பு