×

லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் என ஏமாற்றி 3 பெண்களை திருமணம் செய்த ‘கல்யாண மன்னன்’ கைது

தென்காசி: லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் என ஏமாற்றி 3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னனை, போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த 2014 முதல் 2017 வரை மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு ரயிலில் சென்று வந்த போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த அருள்ராயன் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அருள்ராயன், தான் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வருவதாக கூறி அவருடன் பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் ராஜபாளையம், மதுரை என பல்வேறு இடங்களில் வசித்து வந்தனர். அப்போது அருள்ராயன், லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வருவதாக ஏமாற்றி ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்திருப்பது தெரியவந்ததையடுத்து அந்த இளம்பெண், அருள்ராயனை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அருள்ராயன், 3வது மனைவியை குடும்பம் நடத்த வருமாறும், இல்லாவிட்டால் பணம் தருமாறும் கூறி அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் அருள்ராயன், ராஜபாளையம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருவதும், லஞ்ச ஒழிப்புதுறையில் பணியாற்றுவதாக ஏமாற்றி 3 பெண்களை திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து புளியங்குடி போலீசார், கல்யாண மன்னன் அருள்ராயனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் என ஏமாற்றி 3 பெண்களை திருமணம் செய்த ‘கல்யாண மன்னன்’ கைது appeared first on Dinakaran.

Tags : Kalyana Mannan ,Tenkasi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...