×

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இருளர் பழங்குடியின மகளிருக்கு ஆட்டோக்கள்: கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், இருளர் பழங்குடி அமைப்பிற்கு மூலிகை மின் வாகன ஆட்டோக்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் புனித தோமையார் மலை ஆகிய 3 வட்டாரங்களில் உள்ள 119 கிராம ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவுகளுக்கான நிதி வழி வகைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக தொழிலில் முன்மாதிரியான செயலாக்கத்திற்கு புதுமை தொழில்களை ஊக்குவித்தல் என்ற நிதியுதவி வழங்கப்படுகிறது. புதுமை தொழில்களை ஊக்குவித்தல் என்னவெனில் மாநிலத்தின் வளர்ச்சிச் சவால்களை எதிர்க்கொள்ளும் வகையில், தொழில் நுட்பம், புதுமையான கண்டுபிடிப்பு, கூட்டாண்மை முதலியவற்றை பயன்படுத்தி புத்தாக்கம் மற்றும் புதுமையான யோசனை, வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்களிப்பதாகும்.

மேற்கொண்ட புதுமை தொழில்களை ஊக்குவித்தல் நிதித்திட்டத்தின் கீழ், இருளர் பழங்குடி பெண்கள் நலச் சங்கம் என்ற பழங்குடி அமைப்பிற்கு ‘சக்கரங்களில் உணவு மையம்’ என்ற பெயரில் அவர்களுக்கு மின் வாகனம் வாங்கி இவர்களுடைய மூலிகை சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு ரூ.8.94 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது.

இந்த நிதி மூலம் மின் வாகனம் பெறப்பட்டு இதில் இருளர் பழங்குடி பெண்கள் தொகுக்கப்பட்ட மூலிகை மூலம் மூலிகை தேநீர், செம்பருத்தி தேநீர், ஆவாரம் தேநீர், துளசி தேநீர் மற்றும் புதினா தேநீர் மேலும் தூதுவளை, முடக்கத்தான் சூப் போன்ற சூப் வகைகளும், பாரம்பரிய உணவுகளான சிறுதானிய இட்லி, மூலிகை தோசை, சிறுதானிய இனிப்பு மற்றும் கார வகைகள் போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களும் மற்றும் இருளர் பழங்குடி மக்களின் மூலிகைப் பொருட்களும் இதன் மூலம் விற்கப்படவுள்ளன.

* நரிக்குறவர்கள் கலெக்டரிடம் மனு
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் ஆகியவை செய்து தரக்கோரி பல்வேறு தரப்பிலும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்டோர் நரிக்குறவர்கள் வாரந்திர மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கன்டோன்மெண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்தும் இதுவரை வீட்டு மனை வழங்கவில்லை. இதனால், சாலை ஓரம் கூடாரம் அமைத்து தங்கி வருகிறோம். இதனால், எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எங்கள் குழந்தைகள் பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது. தமிழக அரசு பல்வேறு இடங்களில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ளது. அந்த குடியிருப்புகளில் எங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று பல நாள் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவே, மாவட்ட கலெக்டரை சந்தித்து குடும்பத்துடன் மனு கொடுக்க வந்துள்ளோம்,’’ என்று‌ தெரிவித்தனர்.

The post வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இருளர் பழங்குடியின மகளிருக்கு ஆட்டோக்கள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Rahulnath ,Irular ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...