×

இடைப்பாடி அருகே நிலப்பிரச்னையில் பயங்கரம் காரால் மோதித்தள்ளி 2 பேர் வெட்டிக்கொலை: 15 வயது மகனுடன் தொழிலாளி வெறிச்செயல்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, நிலப்பிரச்னையில் தொழிலாளி 15 வயது மகனுடன் சேர்ந்து, 2 பேரை கத்தியால் சரமாரி வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே இருப்பாளி ஊராட்சி, கலர்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (எ) கந்தசாமி(43). இவர் கடந்த 11 ஆண்டுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான மாதேஷிடம்(50) 30 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து பணம் வாங்கினார். அதை திருப்பித் தரவோ, நிலத்தை மீட்கவோ முயற்சிக்காததால், அந்த நிலத்தை விற்கப்போவதாக மாதேஷ் கூறியுள்ளார். ஆனால், நிலத்தை விற்கக் கூடாது என்று முருகன் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்க்கு(49) கடந்த 26ம் தேதி அந்த நிலத்தை, மாதேஷ் விற்பனை செய்துள்ளார். இதனால், நிலத்தை வாங்கிய செல்வராஜ் மீது, முருகன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று மதியம் செல்வராஜ் உறவினரான கந்தசாமிக்கு(69) குறுக்கப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் வாங்குவதற்காக டூவீலரில் சென்றுள்ளார். இடைப்பாடி அருகே, வாழைக்காயன் தோட்டம் சாலை வழியாக சென்ற போது, தனது 15 வயது மகனுடன் காரில் வந்த முருகன், டூவீலர் மீது வேகமாக காரை மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ், கந்தசாமி ஆகியோர் காயமடைந்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கிய முருகன் மற்றும் அவரது மகன், எங்களது நிலத்தை வாங்கக்கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டாயா? என்று கேட்டபடி கத்தியால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். அப்பகுதியினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் இறந்தனர்.

The post இடைப்பாடி அருகே நிலப்பிரச்னையில் பயங்கரம் காரால் மோதித்தள்ளி 2 பேர் வெட்டிக்கொலை: 15 வயது மகனுடன் தொழிலாளி வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Eadpadi ,
× RELATED இடைப்பாடி அருகே பயங்கரம் விவசாயி திருப்புளியால் குத்திக்கொலை