×

அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஆவின் பால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை

சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாலில் கொழுப்புச் சத்து குறைந்து வருவதாகவும், அளவு குறைவாக உள்ளதாகவும் கூறுவது தவறான குற்றச்சாட்டு. ஆவின் இயந்திரங்கள் மூலம் பால் பேக் செய்யப்படுகிறது. அவற்றை அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், பால் அளவு குறைவதாக உள்ளதாக வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு முந்தைய 10 ஆண்டுகளில்தான் தனியார் பால் நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்றியுள்ளன. கூட்டுறவு சங்கங்கள்தான் ஆவினின் அடிப்படையாகும். கடந்த அரசின் கொள்கைகள் காரணமாக சில பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது பிரதம கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தீவிர பயிற்சி அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பால் பாக்கெட்டுகளில் லீக்கேஜ் இருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மனித செயல்பாடுகளில் இருக்கும் லீக்கேஜ்க்கு நஷ்டஈடு வழங்கப்படுகிறது.

ஒரு சிலர் லீக்கேஜ் உள்ள பால் பாக்கெட்டுகளை திருப்பி அளிக்காமல் விற்பனை செய்துவிடுகின்றனர். அதுகுறித்து புகார் வந்துள்ளது, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். லீக்கேஜ் இருந்தால் அதனை பொதுமக்களிடம் விற்பனை செய்யக் கூடாது. ஆவின் பால் அட்டை அளிப்பதில் கடந்த காலங்களில் சில சிக்கல்கள், முறைகேடுகள் நடந்துள்ளது. அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ஆவின் பொருட்கள் இணையத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் பால் விற்பனை விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை. பால் உற்பத்தியாளர்கள் தர சோதனை காரணமாக மிகவும் பயனடைந்துள்ளனர். விலையேற்றம் காரணமாக பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் தொகை நிலுவையில் வைக்கப்படுவதாக தொடர்ந்து திட்டமிட்டு தவறான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. கொள்முதல் தொகை நிலுவை வைக்கப்படுவதில்லை. தொழிற்சாலைகளில் பால் பாக்கெட்டுகளில் பாலை எடுக்கும் போது கடந்த காலங்களில் ஆவின் நிலையத்தில் 0.2 அளவு பால் வீணாக்கப்படுவதாக இருந்தது.

தற்போது, 0.05% ஆக குறைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒரு சில இடங்களில் பால் தாமதமாக வழங்கப்படுகிறது. ஆவினில் எந்த பொருளின் விலையும், கொழுப்பு அளவும் குறைக்கப்படவில்லை. ஆவின் பொருட்களை பொறுத்தவரை தமிழகத்தின் தேவையை தடையில்லாமல் வழங்குவது மட்டுமே நோக்கமாக உள்ளது. மேலும், வெளிநாட்டு விற்பனை குறித்து தற்போது கவனம் செலுத்தவில்லை. பால் பாக்கெட்டுகளில் மழைநீர் சேமிப்பு குறித்து விளம்பரம், ஆவினின் விளம்பரம் கிடையாது. அது மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் விளம்பரம். ஒரு நல்ல விஷயத்துக்காக விளம்பரத்தை அளித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

* தீபாவளி விற்பனை 20% அதிகரிப்பு
தீபாவளி விற்பனை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இதுவரை 20 சதவீதத்திற்கும் அதிகமாக ஆர்டர் கிடைத்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ரூ.115 கோடி விற்பனையான நிலையில் இந்தாண்டு ரூ.149 கோடிக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. 3 காம்போ தொகுப்பு வரவேற்பை பெற்றுள்ளதால் தீபாவளி விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தரமாகவும், தூய்மையாகவும் உற்பத்தி பணி நடந்து வருகிறது. தற்போது வரை ரூ.36.2 கோடி அளவிற்கு விற்பனை நடந்துள்ளது.

The post அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் ஆவின் பால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,CHENNAI ,Aavin Company ,Aavin ,Nandanam ,Mano ,Aain ,Dinakaran ,
× RELATED வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31...