×

பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தடைகோரி மனைவி வழக்கு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறி பாஜ திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவராக உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கடந்த மாதம் 21ம் தேதி கானத்தூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, சென்னையில் பதிவாகி இருந்த மேலும் 2 வழக்குகளிலும் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் எனது கணவர் இல்லை. அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, எனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு மனு அளித்தும், மனு குறித்து பதிலளிக்கவில்லை. எனவே எனது கணவர் அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

The post பாஜ நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தடைகோரி மனைவி வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Amar Prasad Reddy ,Chennai ,Tamil Nadu ,Annamalai ,Chengalpattu district ,Panaiyur ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...