×

ஒழிக..ஒழிக!: தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கம்.. காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு..!!

ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்த சென்றபோது அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. இன்று தேவர் குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் சென்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் சென்றார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.

எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது. தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள், எடப்பாடி வருகைக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு தேவர் நினைவிடத்துக்கு வராத எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு மட்டும் வருவது ஏன்? என்று முழக்கம் எழுப்பியவர்கள் கேள்வி எழுப்பினர்.

எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே தேவர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த செல்வதாக ஏற்கனவே டிடிவி விமர்சனம் செய்திருந்தார். தேவர் நினைவிடத்தில் திரண்டிருந்தவர்களும் அதே கண்ணோட்டத்துடன் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதால் எடப்பாடி தரப்பு அதிர்ச்சி அடைந்தது. சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் சிலர் கண்டன முழக்கம் எழுப்பினர். தேவர் நினைவிடத்துக்கு எடப்பாடி சென்றபோது மட்டுமல்லாது, ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போதும் பழனிசாமிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி சென்ற வாகனத்தையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட முயற்சி செய்தனர். வழக்கமான காரில் செல்லாமல் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பிரத்யேக வாகனத்தில் பழனிசாமி பசும்பொன் சென்றார். பலத்த பாதுகாப்பையும் மீறி பழனிசாமி வாகனத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஒழிக..ஒழிக!: தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கம்.. காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Devar Memorial ,Ramanathapuram ,Eadapadi Palanisami ,Pasumphon ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து...