×

அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேட்டி

காந்திநகர்: அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாகவே மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இளம் வயதினர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மாரடைப்பு காரணமாக இதுபோன்ற மரணங்கள் ஏற்படுவது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு என்ன காரணம்? என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருந்தது. அண்மையில் கூட குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கர்பா நடனமாடிய 12-ஆம் வகுப்பு மாணவன் உட்பட 10 பேர் ஒரே நாளில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாரடைப்பால் உயிரிழந்த 10 பேரும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக இளவயது மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அதற்கு பதிலளித்த அவர், மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்து வருவது குறித்து ஐசிஎம்ஆர் தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவின்படி, அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம் என கூறப்படுகிறது. தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க அதீத உழைப்பு, அதீத உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு தீவிர உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். இதனால் மாரடைப்பு ஏற்படுவது தவிர்க்கலாம் என்று கூறினார். கொரோனாவுக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தம் இருக்குமோ என்று ஏற்கனவே பலரிடம் சந்தேகம் இருந்தது. தற்போது ஒன்றிய அமைச்சரின் இந்த பதில், ஐசிஎம்ஆர்-ன் ஆய்வுகளின் மூலம் இளம் வயது மாரடைப்புகளுக்கும், கொரோனாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

The post அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Manchuk Mandavia ,Gandhinagar ,Union Health Minister ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...