×

நாட்டையே உலுக்கிய கேரள குண்டுவெடிப்பு.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: சரணடைந்தவர் மீது உபா சட்டம் பாய்ந்தது!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்த்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள ஒரு அரங்கத்தில் ெயகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் 3 நாள் ஜெபக்கூட்டம் நடந்தது. கடைசி நாள் கூட்டம் நேற்று காலை சுமார் 9 மணிக்கு தொடங்கியது. இதில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை சுமார் 9.30 மணி அளவில் திடீரென அரங்கத்தில் உள்ள மேடைக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அரங்கத்தில் இருந்த நாற்காலிகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர்.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். 52 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கொச்சி களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற தொடுபுழாவை சேர்த்த குமாரி (53) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 12 வயது சிறுமி உட்பட 18 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொச்சி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வீணா ஜார்ஜ், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே நேற்று மதியம் திருச்சூர் அருகே உள்ளகொடகரை போலீஸ் நிலையத்தில், கொச்சியில் வெடிகுண்டு வைத்ததாக கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார்.

அதற்கு முன்னதாக சமூக வலைதலைப்பக்கத்தில் தாம் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும் டொமினிக் மார்ட்டின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பிரார்த்தனை கூட்டட்தை ஏற்பாடு செய்த Jehovah Witnesses group தேசவிரோதிகள் எனவும் அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டின் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) இந்த விசாரணையை நடத்த உள்ளது. மேலும் கேரளா மாநில அரசும் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் 20 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவையும் விசாரணைக்காக அமைத்துள்ளது. அத்துடன் இன்று காலை பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

The post நாட்டையே உலுக்கிய கேரள குண்டுவெடிப்பு.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: சரணடைந்தவர் மீது உபா சட்டம் பாய்ந்தது!! appeared first on Dinakaran.

Tags : Kerala Bombing Shook the ,Thiruvananthapuram ,Kerala ,Kochi ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது