×

கொச்சியில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி தமிழ்நாடு-கேரள எல்லையில் விடிய விடிய சோதனை: சோதனை சாவடிகள், ரயில் நிலையங்கள், விடுதிகளில் தீவிர கண்காணிப்பு

சென்னை: கேரள மாநிலம், கொச்சியில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியாக இரு மாநில எல்லையில் விடிய விடிய சோதனை நடந்தது. சோதனை சாவடிகள், ரயில் நிலையங்கள், விடுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் பலத்த சோதனைக்கு பின்பே பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அனுமதித்தனர். கேரள மாநிலம் கொச்சி, களமசேரியில் உள்ள கிறிஸ்தவ கூட்ட அரங்கில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், சோதனைச் சாவடிகளில் தீவிர தணிக்கை மேற்கொள்ளவும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கேரள எல்லையோரத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் 11 மாநில சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. புதிதாக யாரேனும் நடமாடினால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்ட எஸ்பி., சுந்தரவடிவேல் கேரள எல்லையை ஒட்டிய சோதனை சாவடிகளில் நேற்று நேரில் ஆய்வு செய்தார். விழிப்புடன் இருக்குமாறு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதேபோல கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கடந்த ஆண்டு அக்டோபரில் கோவையில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த நிலையில் இதே மாதத்தில் கேரளாவில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து சர்ச்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நகரில் போலீசார் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர், மாவட்டங்களில் சுமார் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மசூதிகள், கோயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையங்களின் அனைத்து பிளாட்பாரங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பார்சல் மற்றும் வளாக பகுதியில் மோப்ப நாய், வெடி குண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் மூலமாக சோதனை நடக்கிறது. வடகோவை, போத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் அலார்ட் உத்தரவு பின்பற்றப்படுகிறது.

குமரி: குமரி மாவட்டத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன்படி குமரி மாவட்டம் – கேரள எல்லையோர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று டி.எஸ்.பி. உதயசூரியன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். குமரி – கேரள எல்லையில் உள்ள முக்கிய சோதனை சாவடியான களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று காலை வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. கேரளாவில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மோப்ப நாய் மார்ஷல் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், மார்த்தாண்டம் பஸ் நிலையம், தக்கலை பஸ் நிலையம், களியக்காவிளை பஸ் நிலையங்களிலும் சோதனை நடைபெற்றது. வடசேரி பஸ் நிலையத்தில் திருவனந்தபுரம் சென்ற பஸ்களில் சோதனை நடந்தது. நாகர்கோவில் – திருவனந்தபுரம், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது. நாகர்கோவில், குழித்துறை ரயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய தேவாலயங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மதுரை: மதுரை வழியாக கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரயில்களிலும், மதுரை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து மோப்பநாய் ஆஸ்டின் மூலம் ரயில் நிலைய பயணிகள் தங்கும் அறைகள், பார்சல் அலுவலகம், ரயில் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று சோதனை செய்தனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகளையும் சோதனை செய்தனர். மதுரை போலீசார் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து கேரளா மற்றும் எல்லை பகுதி நகரங்களுக்கு செல்லும் பஸ்களையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

தேனி: தேனி மாவட்டம் போடிமெட்டிலும், போடிமெட்டு மலை அடிவாரப்பகுதியான முந்தலிலும் போலீசார் செக் போஸ்ட் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மோப்ப நாய் வெற்றியுடன் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்ட பின்னரே செக் போஸ்ட்டிலிருந்து வாகனங்களை தமிழ்நாட்டிற்குள் அனுப்புகின்றனர். தென்காசி: தமிழக – கேரள எல்லை பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. தற்போது நடைபெற்று வரும் வாகன சோதனையில் புளியரை மற்றும் செங்கோட்டை காவல் நிலையம் ஒன்றிணைந்து மெட்டல் டிடெக்டர் மற்றும் எப்ஆர்எஸ் எனப்படும் செயலி மூலம் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளை சோதனை செய்து வருகின்றனர். இதை நெல்லை எஸ்பி சிலம்பரசன் (பொறுப்பு) ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, தனகொண்டபல்லி, பத்தலப்பல்லி, பச்சூர், சேர்க்காடு, பொன்னை, ஆர்.கே.பேட்டை என இரு மாநில எல்லை சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர வாகன தணிக்கை நேற்று காலை முதல் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்ட எல்லைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், முக்கிய வழிபாட்டுத்தலங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாடு-கேரளா ரயில்கள் செல்லும் ரயில் நிலையங்களான சேலம், தஞ்சை, திருச்சி, திருவாரூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் விடியவிடிய தீவிர சோதனை நடத்தப்பட்டது. தனியார் விடுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான வகையில் யாரேனும் உள்ளனரா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

* வேளாங்கண்ணி பேராலயத்தில் சோதனை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்தில் எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவி உதவியுடன் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பேராலயத்திற்கு வந்த பக்தர்களிடம் தீவிர சோதனை நடத்தினர். வேளாங்கண்ணி கடற்கரை சாலை, வேளாங்கண்ணி கடை வீதி, விடுதிகள் என அனைத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். விடுதியில் தங்கியுள்ள பக்தர்களிடமும் விசாரணை நடத்தினர். சந்தேகப்படும்படி யாராவது நடமாடினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

The post கொச்சியில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி தமிழ்நாடு-கேரள எல்லையில் விடிய விடிய சோதனை: சோதனை சாவடிகள், ரயில் நிலையங்கள், விடுதிகளில் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Kochi serial bomb blasts ,Tamil Nadu ,Kerala ,crackdown ,Chennai ,Kochi, Kerala ,-state border ,Tamil Nadu-Kerala border ,Kochi ,Dinakaran ,
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...