×

தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டையில் அலைமோதிய மக்கள் கூட்டம்: பட்டாசு கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

* ஸ்வீட், கார வகைகள் ஆர்டர்கள் குவிகிறது

சென்னை: தீபாவளிக்கு பொருட்கள் வாங்க சென்னை தி.நகர், புரசை,வண்ணாரப்பேட்டையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பட்டாசு கடைகள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் ஸ்வீட், கார வகைகள் ஆர்டர்களும் கடைகளுக்கு வந்து குவிய தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கி விட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீபாவளி பொருட்கள் வாங்க படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் பஜார் வீதிகளில் தீபாவளி விற்பனை நேற்று களைகட்டி காணப்பட்டது. தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலையிலேயே சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர். இதனால் வர்த்தக பகுதியான சென்னை தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பேண்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்ெதடுத்து வாங்கினர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் வந்து குவிந்துள்ளது. புதிய மாடல் ஆடைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கினர்.

மாலை 5 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. மேலும் பொருட்களை வாங்க கார், மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு பஸ், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கண்ணாடி வளையல், கம்மல், கேர் பின், கவரிங் நகைகள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தேர்ந்தெடுத்தனர். பொதுமக்கள் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர, சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். ஒலிபெருக்கி வாயிலாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தி.நகரில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சில இடங்களில் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். வரும் நாட்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அதனை பயன்படுத்தி நிறைய பேர் தீபாவளி பொருட்களை வாங்க வருவர். மேலும் தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தீபாவளிஅன்று விருந்தினர்கள், நண்பர்களுக்கு ஸ்வீட் மற்றும் கார வகைகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்குவது உண்டு. இதனால் ஸ்வீட் கடைகளில் தீபாவளி பண்டிக்கைக்கான ஆர்டர்கள் குவிய தொடங்கியுள்ளது. பல ஸ்வீட் கடைகளில் மக்கள் காலையில் இருந்தே ஆர்டர் கொடுத்த காட்சியையும் காண முடிந்தது. மேலும் வீடுகளிலும் ஸ்வீட், காரம் செய்யும் பணிகள் தொடங்கியது. வரும் நாட்களில் ஸ்வீட், காரம் வகைகள் ஆர்டர் கொடுக்க கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டையில் அலைமோதிய மக்கள் கூட்டம்: பட்டாசு கடைகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : D. Nagar ,Vannarappet ,Diwali ,Chennai ,T. Nagar ,Purasai ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு