புதுடெல்லி: எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, காசாவில் விரைவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரால் காசாவில் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்வா, சாவா நிலையில் போராடி வருகின்றனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யும் முக்கிய நாடாக எகிப்து இருந்து வருகிறது. இந்நிலையில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலை குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். மேலும், தீவிரவாதம், வன்முறை, பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்பான கவலைகளையும் பகிர்ந்து கொண்டோம். காசாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தேவையான மக்களுக்கு கொண்டு செல்வதை எளிதாக்குவதற்கும் உடன்படுகிறோம்’’ என கூறி உள்ளார்.
The post காசாவில் விரைவில் அமைதி எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.