×

ஹமாசை அழித்து பணயக் கைதிகளை மீட்கும் வரை காசா போர் நீண்டநாள் நீடிக்கும்: இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு சூளுரை உணவுக்காக ஐநா கிடங்குகள் சூறை

டெய்ர் அல்-பலாஹ்: ‘ஹமாசை அழித்து பணயக் கைதிகள் அனைவரையும் மீட்கும் வரையிலும் காசா போர் இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்’ என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறி உள்ளார். இதற்கிடையே, காசாவில் உணவுக்காக ஐநா கிடங்குகளை பொதுமக்கள் சூறையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் 3 வாரத்தை தாண்டி நீடித்து வருகிறது. வான்வழியாகவும், கடல் மார்க்கமாகவும் இஸ்ரேல் நடத்திய போரில் காசாவின் பல கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. தகவல் தொடர்பும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று வடக்கு காசாவில் இஸ்ரேல் பீரங்கிகள் தொடர்ந்து தரைவழி தாக்குதல் நடத்த, வடக்கு மற்றும் தெற்கு காசாவில் எப்-16 போர் விமானங்கள், டிரோன்கள் மூலம் இடைவிடாத வான்வழி தாக்குதலும் நடந்தது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிசில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் பலியாகினர். இஸ்ரேல் உத்தரவின் பேரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காசாவில் இருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர். விடியவிடிய 450 இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.

காசாவை முழுமையாக இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் உணவு, குடிநீர், எரிபொருள், மருந்துகள் பற்றாக்குறை அபாய கட்டத்தை எட்டி உள்ளது. உணவு, குடிநீர் இல்லாமல் தெற்கில் குடிபெயர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர். எகிப்து எல்லை வழியாக காசாவிற்குள் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்க வேண்டுமென பல உலக நாடுகள் வலியுறுத்தியும் இஸ்ரேல் சம்மதிக்கவில்லை. இதனால், உணவுக்காக ஐநா கிடங்குகளை சூறையாடும் பரிதாப நிலைக்கு தெற்கு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாலஸ்தீன அகதிகளுக்காக உணவு, மருந்து பொருட்கள் வைக்கப்பட்டிருந்த 4 கிடங்குகளை ஆயிரகணக்கான மக்கள் சூறையாடி பொருட்களை எடுத்து சென்று விட்டதாக ஐநா பணியாளர்கள் கூறி உள்ளனர். 3 வாரத்தை தாண்டியும் போர் நீடிப்பதால், மக்கள் பயம், விரக்தி மற்றும் அவநம்பிக்கையில் இருப்பதாக பணியாளர்கள் கூறி உள்ளனர்.

இதற்கிடையே, ஹமாஸ் படையினர் பணயக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று மீண்டும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘தற்போது காசா போர் புதிய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த 2ம் கட்டத்தில் ஹமாசின் பதுங்கு குழி, நிலத்தடி சுரங்கங்களை அழிப்போம். ஹமாஸ் படையை பூண்டோடு ஒழித்து, பணயக் கைதிகளை மீட்போம். எனவே இப்போர் இன்னும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்’’ என கூறி உள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகையில், ‘‘நிலத்திலும், நிலத்திற்கு அடியிலும் நாங்கள் போரிட்டு வருகிறோம்’’ என்றார். ஏற்கனவே காசா மக்களின் நிலை வாழ்வா, சாவா கட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் போர் பல நாட்கள் நீடிக்கும் என்ற அதிபர் நெதன்யாகுவின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* மருத்துவமனைகளுக்கு அடியில் பதுங்கு குழிகள்

காசாவின் மிகப்பெரிய ஷிபா மருத்துவமனையை ஒட்டி இஸ்ரேல் ராணுவம் நேற்று கடுமையான குண்டுவீச்சு நடத்தியாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவமனைக்கு செல்லும் சாலை அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை முற்றிலும் ஹமாசின் பதுங்குமிடமாக செயல்படுவதாகவும், மருத்துவமனைக்கு அடியில் பெரும் கட்டமைப்பை உருவாக்கி ஹமாஸ் படையினர் பதுங்கியிருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதே போல, 12,000 பேர் தஞ்சமடைந்துள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையையும் உடனடியாக காலி செய்ய இஸ்ரேல் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்து அதன் அருகில் நேற்று குண்டுவீசி உள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பு மறுத்துள்ளது.

* வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது

நேபாள தலைநகர் காட்மாண்டு சென்றுள்ள ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் அளித்த பேட்டியில், ‘‘காசாவில் நொடிக்கு நொடி நிலைமை விபரீதமாகிக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் அனுமதிப்பதற்கு பதிலாக இஸ்ரேல் ராணுவம் தனது தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தி வருவதைப் பார்த்து வருந்துகிறேன். கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. நம் கண் முன்னே மனிதப் பேரழிவு நடப்பதை உலகம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது’’ என்றார்.

* பலி 8,000

கடந்த 7ம் தேதி இஸ்ரேல், ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 8,005 ஆக அதிகரித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. 20,242 பேர் காயமடைந்துள்ளனர். காசா போரைத் தொடர்ந்து போராட்டம், வன்முறையால் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் 112 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

The post ஹமாசை அழித்து பணயக் கைதிகளை மீட்கும் வரை காசா போர் நீண்டநாள் நீடிக்கும்: இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு சூளுரை உணவுக்காக ஐநா கிடங்குகள் சூறை appeared first on Dinakaran.

Tags : Gaza ,Hamas ,Israeli ,President Netanyahu ,UN ,Deir al- ,Balah ,UN warehouses ,Dinakaran ,
× RELATED முடிவின்றி நீடிக்கும் இஸ்ரேல்...