×

இந்தியாவில் பகுதி சந்திரகிரகணம்

சென்னை: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது ஏற்படும் பகுதி சந்திர கிரகண நிகழ்வு நேற்று நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் நிகழும் சூரிய, சந்திர கிரகணங்களை தொடர்ந்து இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28ம் தேதி நிகழும் என்றும், அடுத்த நாள் 29ம் தேதி அதிகாலையில் முடிவுக்கு வரும் என்றும் அறிவியல் அமைச்சகம் அறிவித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் ஒரு பகுதியாக இந்த சந்திர கிரகணம் தெரிந்தது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் இந்த பகுதி சந்திர கிரகணம் தெரிந்தது. இந்த கிரகணம் நேற்று முன்தினம் இரவு 11.32 மணிக்கு தொடங்கி நேற்று தேதி அதிகாலையில் 3.26 மணி வரை நீடித்தது. அப்போது நிலவில் பூமியின் நிழல் விழுந்து பகுதி நேர சந்திர கிரகணமாக தெரிந்தது. இந்தியா தவிர ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, வடக்கு, கிழக்கு, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் ஆகிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணத்தின் சில பகுதிகள் தெரிந்தன.

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது அவற்றின் சரியான சீரமைப்பு ஒழுங்காக இல்லாத போது பகுதி சந்திர கிரகணம் தோன்றுகிறது. அப்போது சந்திரனின் மேற்பரப்பில் ஒரு சிறிய பகுதி பூமியின் நிழலின் இருண்ட மையப்பகுதியால் மறைக்கப்பட்டு இருக்கும். இதை அம்ப்ரா என்றும் மீதம் உள்ள பகுதி பெனும்ப்ரா என்றும் கூறுகின்றனர். இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்த நிகழ்வு இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம். அடுத்த சந்திர கிரகணம் 2024, மார்ச் 25ம் தேதி நிகழும்.

 

The post இந்தியாவில் பகுதி சந்திரகிரகணம் appeared first on Dinakaran.

Tags : Partial ,eclipse ,India ,Chennai ,Earth ,Sun ,Moon ,Partial Lunar Eclipse ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...