×

கேரள மாநிலம் கொச்சியில் பயங்கரம் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன 2 பெண்கள் பலி

* 51 பேர் படுகாயம் l குண்டுவைத்தவன் போலீசில் சரண்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடந்த கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 2 பெண்கள் பலியாகினர். 51 பேர் காயமடைந்தனர். குண்டு ெவடிப்பு நிகழ்த்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் போலீசில் சரணடைந்தார். கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள ஒரு அரங்கத்தில் ெயகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ சபையின் 3 நாள் ஜெபக்கூட்டம் நடந்தது. கடைசி நாள் கூட்டம் நேற்று காலை சுமார் 9 மணிக்கு தொடங்கியது. இதில் சுமார் 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை சுமார் 9.30 மணி அளவில் திடீரென அரங்கத்தில் உள்ள மேடைக்கு அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அரங்கத்தில் இருந்த நாற்காலிகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடத் தொடங்கினர்.
இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். 52 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு கொச்சி களமசேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற தொடுபுழாவை சேர்த்த குமாரி (53) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 12 வயது சிறுவன் உட்பட 18 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) உள்பட மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் நேற்று மதியம் திருச்சூர் அருகே உள்ள ெகாடகரை போலீஸ் நிலையத்தில், கொச்சியில் வெடிகுண்டு வைத்ததாக கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். ஆனால் அதை போலீசார் நம்பவில்லை. அவர் மன நோயாளியாக இருக்கலாம் என்று கருதினர். தன்னிடம் இருந்த செல்போனை கொடுத்து பரிசோதிக்க கூறினார். அதில், ஜெப கூட அரங்கில் குண்டு வைப்பதும், அது ெவடித்து சிதறும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதை பார்த்த ேபாலீசார் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை உடனடியாக ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு கொண்டு சென்று நடத்திய விசாரணையில் அவர் குண்டு வைத்தது உறுதியானது. இதையடுத்து அவரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் டொமினிக் மார்ட்டின் கொச்சி தம்மனம் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

* பின்னணியில் தீவிரவாதிகள்?

டொமினிக் மார்ட்டின் போலீசில் கொடுத்த செல்போனில் அவர் குண்டு வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர் தனியாக தான் ஐஇடி வகை குண்டை இரண்டு இடங்களில் வைத்துள்ளார். அத்துடன் ஒரு பெட்ரேல் நிரப்பிய பாட்டிலையும் அருகில் வைத்துள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்று ரிமோட் மூலம் அதை வெடிக்க வைத்துள்ளார். இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை அனைத்தையும் இவர் தனியாக செய்திருக்க முடியாது என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கத்தினர் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. ஐஇடி ரக குண்டு தயாரிப்பது குறித்து டொமினிக் மார்ட்டின் கடந்த 6 மாதங்களாக இன்டர் நெட் மூலம் பயிற்சி எடுத்து வந்துள்ளார். இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்த உடன் அந்த பகுதியில் இருந்த ஒரு நீல நிற கார் வேகமாக ெவளியே சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. கார் எண்ணை பரிசோதித்த போது அது போலி எண் என்பது தெரிய வந்தது. இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

* டாக்டர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

கொச்சி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் விடுமுறையில் உள்ள டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

* தேசிய கீதம் பாடவிலக்கு பெற்றவர்கள்

கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினரான ெயகோவாவின் சாட்சிகள் வரலாறு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டு, 19ம் நூற்றாண்டில் தொடங்கியதாக அறியப்படுகிறது. வரலாற்று ஆதாரங்களின்படி, 1872ம் ஆண்டு பிட்ஸ்பர்க்கை சேர்ந்த சார்லஸ் டேஸ் ரஸ்ஸல் என்பவரால் தொடங்கப்பட்ட சர்வதேச பைபிள் மாணவர் சங்கத்தின் ஒரு பிரிவாக ெயகோவாவின் சாட்சிகள் பிரிவினர் உருவாகி உள்ளனர். இவர்கள் ெயகோவாவையே கடவுளாக வழிபடுபவர்கள். ஏசுவை கடவுளின் மகனாகவே பார்க்கின்றனர். ஆனாலும் ஏசுவின் போதனைகள், பைபிளை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவர்களாகவே வாழ்கின்றனர். இப்பிரிவினர் சில கடுமையான சமூக விதிகளை பின்பற்றுபவர்கள். ரத்ததானம் பெற மாட்டார்கள்.

கள்ளத்தொடர்பு இருந்தால் தவிர, கணவன்-மனைவி விவகாரத்து பெற முடியாது. பைபிளை போதிப்பது, பொது இடங்களில் பைபிளை வழங்குவது உள்ளிட்டவற்றை முக்கிய மத சேவையாக செய்கின்றனர். இப்பிரிவினருக்கு சர்வதேச அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவில் கூட மத தலைவர்கள் என யாரும் இருப்பதில்லை. அந்தந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாகவே செயல்படுகின்றனர். இந்தியாவை பொறுத்த வரையில் ெயகோவாவின் சாட்சிகளுக்கு 947 சபைகளும், 56,000 உறுப்பினர்களும் உள்ளனர். பல நாடுகளிலும் இப்பிரிவினர் உள்ளனர். கடந்த 30 ஆண்டுக்கு முன் 1986ல் இப்பிரிவை சேர்ந்த 3 சிறுவர்கள் பள்ளியில் தேசிய கீதம் பாட மறுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது இப்பிரிவினர் உச்ச நீதிமன்றத்தை அணுகி, தேசிய கீதம் பாடுவதில் இருந்து விலக்கு பெற்றனர். ெயகோவாவின் சாட்சிகளின் குழந்தைகளை தேசிய கீதம் பாட கட்டாயப்படுத்துவது மத அடிப்படை உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

* ஐஇடி என்ற கைவினை குண்டு செயல்படுவது எப்படி?

கொச்சியில் பயன்படுத்தப்பட்டது ஐஇடி (இம்ப்ரவைஸ்டு எக்ஸ்ப்ளோசிவ் டிவைஸ்) என தெரியவந்துள்ளது. இதை ‘கைவினை குண்டு’ என அழைக்கலாம். எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து இந்த குண்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு கைவினை குண்டு (ஹோம் மேட் பாம்) என அழைக்கப்படுகிறது. தீவிரவாதிகளும், தற்கொலைப் படையினரும், ரவுடிக் கும்பல்களும் தான் இந்த வெடிகுண்டுகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.பல விதத்தில் பல வடிவங்களில் இந்த குண்டுகளை தயாரிக்கின்றனர். பைப்புகள், பாத்திரங்கள், டிபன் பாக்சுகள், வாகனங்கள் ஆகியவற்றில் வெடிபொருளை நிரப்பி உலகின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.பேட்டரி, டெட்டனேட்டர், சுவிட்ச், வெடிபொருள், சிறிய கண்டெய்னர் அல்லது பெட்டி ஆகியவை தான் இந்த ஐஇடி வெடிகுண்டின் முக்கிய பாகங்கள் ஆகும். இதில் வெடிபொருளாக அம்மோனியம் நைட்ரேட் தான் பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது.

சிறிய தாக்குதல் முதல் அதிகளவு சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இதன் மூலம் குண்டு வெடிப்பை நடத்தலாம். கூடுதல் சேதங்களை ஏற்படுத்துவதற்காக இதில் ஆணிகள் மற்றும் பால் பேரிங்குகளையும் பயன்படுத்துகின்றனர். ரிமோட் கண்ட்ரோல் அல்லது இன்ஃப்ராரெட் முறையை பயன்படுத்தி இதை இயக்கலாம். 1995ல் அமெரிக்காவிலுள்ள ஆக்லஹோமாவில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ஐஇடி வெடிகுண்டு தான் பயன்படுத்தப்பட்டது. இதில் 169 பேர் பலியானார்கள். 1996ல் அட்லாண்டா ஒலிம்பிக் பூங்கா, 2004ல் ஸ்பெயினில் மாட்ரிட் நகரில் ரயில்களில் நடந்த குண்டுவெடிப்பு உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த ஐஇடி குண்டுகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகமாக மாவோயிஸ்டுகள் தான் இந்த குண்டுகளை பயன்படுத்துகின்றனர். காஷ்மீரில் தீவிரவாதிகளும் இதை பயன்படுத்தி குண்டு வெடிப்புகளை நடத்தியுள்ளனர்.

* இன்டர்நெட் பார்த்து தயாரித்தடிபன்பாக்ஸ் குண்டு

போலீசிடம் டொமினிக் மார்டின் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 6 மாதமாக இன்டர்நெட் பார்த்து டிபன் பாக்ஸ் குண்டு தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். குண்டை வெடிக்கச் செய்ய, சிறிய பாட்டிலில் பெட்ரோல் வைத்ததாக அவர் போலீசிடம் கூறியுள்ளார். ரிமோட் கன்ட்ரோல் மூலம் அந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். வெடி மருந்து மற்றும் ரிமோட் கன்ட்ரோல் உள்ளிட்ட பொருட்களை எங்கு, யாரிடம் வாங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரள மாநிலம் கொச்சியில் பயங்கரம் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Kochi, Kerala ,Charan Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...