×

111 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: ‘பாரா’ ஆசிய விளையாட்டு

ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய ‘பாரா’ விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கடைசி நாளான நேற்று ஆண்கள் ஈட்டி எறிதல் எப்-55 பிரிவில் இந்திய வீரர்கள் நீரஜ் யாதவ் (33.69 மீட்டர்) தங்கம், டேக் சந்த் (30.36 மீ.) வெண்கலம் வென்றனர். 2வது இடம் பிடித்த ஈரான் வீரர் ஜாபர் ஜாகிர் (33.58 மீ.) வெள்ளி பெற்றார். இதுவரை நடந்த ஆசிய பாரா விளையாட்டுகளில் அதிக தொலைவுக்கு ஈட்டியை எறிந்தவர் என்ற புதிய சாதனையை நீரஜ் யாதவ் படைத்தார். ஆண்கள் 400மீட்டர் டி47 பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் திலீப் கேவிட் தங்கம் வென்றார். மகளிர் 1500 மீ. டி20 ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா வெண்கலம் கைப்பற்றினார். ஆண்கள் அதிவேக செஸ் (விஐ-பி1 ஆர்என்டி7) போட்டியில் இந்தியாவின் சதீஷ் இனானி, பிரதான் குமார், அஷ்வின்பாய் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வசப்படுத்தினர்.

செஸ் ஆடவர் குழு (விஐ-பி1 ஆர்என்டி7) ஆட்டத்தில் இந்திய குழு தங்கம் வென்றது. மகளிர் குழு செஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது. ஆடவர் விஐ-பி2 ஆர்என்டி7 பிரிவில் இந்தியாவுக்கும், தனி நபர் விஐ-பி2/பி3 ஆர்என்டி7 பிரிவில் கிஷான் கங்குலிக்கும் வெண்கலம் கிடைத்தது. ரோவிங் கலப்பு இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் (பிஆர்3) இந்திய இணை வெள்ளி வென்றது. தொடர் நிறைவடைந்த நிலையில், இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று இந்தியா புதிய வரலாற்று சாதனை படைத்ததுடன், பதக்க பட்டியலில் 5வது இடம் பிடித்து அசத்தியது. சீனா 521 பதக்கங்களுடன் (214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம்) முதலிடம் பிடித்தது.

The post 111 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: ‘பாரா’ ஆசிய விளையாட்டு appeared first on Dinakaran.

Tags : India ,Para' Asian Games ,Hangzhou ,Asian 'Para' Games ,Hangzhou, China, ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!